முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட மாவீரர்களின் உறவினர்கள், அங்கு உறங்கும் தமது உறவுகளை நினைத்துக் கல்லறைகளைக் கட்டியணைத்து கதறிய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் ஆயிரத்து 800இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்யும் பணிகள் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றன. இதன்போது, கல்லறைகளை இனங்கண்ட உறவினர்கள் அதனைக் கட்டியணைத்துக் கதறி அழுதுள்ளனர்.
அதன் பின்னர் கல்லறைகளைக் சேகரித்து அடுக்கிய உறவினர்களும், முன்னாள் போராளிகளும் மலரஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் காணப்படும் மாவீரர் துயிலும் இல்லங்கள் யுத்த நிறைவின் பின்னர் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டும், கவனிப்பாரற்றும் காணப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசில் அவற்றைத் துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.