Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வடக்கு அமைச்சரவை விவகாரம்: பிரச்சினை இப்போதைக்கு ஓயாது!

வடக்கு அமைச்சரவை விவகாரம்: பிரச்சினை இப்போதைக்கு ஓயாது!

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை விவகாரத்தில் தோன்றியுள்ள சர்ச்சை இப்போதைக்கு முடிவுக்கு வரும்போல் இல்லை என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
சபையின் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலமைச்சரின் குழு அளித்த அளிக்கையின் அடிப்படையில் இரு அமைச்சர்களை அவர்களது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் கோரினார். அதனடிப்படையில் விவசாய அமைச்சராக இருந்தவரான பொ.ஐங்கரநேசனும், கல்வி அமைச்சராக இருந்தவரான க.குருகுலராஜாவும் தமது பதவிகளைத் தியாகம் செய்தனர்.
ஏனைய இரு அமைச்சர்களான சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் மா.டெனீஸ்வரனையும் பதவி நீக்குவதிலும் முதலமைச்சர்  தீவிரமாக இருந்தார். இதற்காக மற்றொரு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றும் கொண்டுவரப்பட்டது. எனினும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலையீட்டை அடுத்து முதலமைச்சருக்கு எதிரான தீர்மானம் கைவிடப்பட்டது.
அதன் பின்னரும் பதவியில் இருந்த அமைச்சர்களுக்கு எதிரான விசாரணை நடக்கும் என்று முதலமைச்சர் அறிவித்ததால் இது ஒரு சர்ச்சையாகத் தொடர்ந்தது. அதனைச் சரிசெய்வதற்காகவே நேற்றுமுன்தினம் சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நான்கினதும் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் கூடிக் கலந்துரையாடினர்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களை நியமிக்கும் முதலமைச்சரின் அதிகாரத்தில் தலையீடு செய்வதில்லை என்று கட்சிகளின் தலைவர்கள் இணங்கினர்.
“இறுதியில் இவ்வாறானதொரு இணக்கம் எட்டப்பட்டது. எனினும், முதலமைச்சரின் நிலைப்பாட்டுக்கு சில கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். வேறு வழியில்லாமல் அந்த இடத்தில் அவர்கள் இணங்கிப் போயிருந்தாலும் முழுமனதோடு அவர்கள் இணங்கினார்கள் என்று சொல்வதற்கில்லை. எனவே, இந்தப் பிரச்சினை இத்தோடு முடிந்துபோகும் என்று நான் நினைக்கவில்லை. அது தொடர்வதற்கான வாய்ப்புகளே இருக்கின்றன” என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவர்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டம் தொடர்பில் அறிந்தவைகள் வருமாறு:-
ரெலோ அமைப்பினர், தமது கட்சியின் சார்பில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற பா.டெனீஸ்வரனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பேசப்பட்டபோது, விசாரணைக் குழு விடுவித்த இரு அமைச்சர்களையும் நீக்கி விட்டு, டெனீஸ்வரனுக்குப் பதிலாக ரெலோ அமைப்பு பிரேரிப்பவருக்கும் மற்றைய அமைச்சுப் பதவியை புளொட்டுக்கும் வழங்கும் முடிவை முதலமைச்சர் முன்வைத்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா  இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தமது கட்சியின் அமைச்சரவைப் பிரதிநித்துவத்தை மாற்றி வழங்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்டார்.
மாகாண சபையில் 15 பேர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது அந்தக் கட்சிக்கு அமைச்சர் ஆசனம் வழங்காமல் விடுவது மேலும் பிரச்சினையை சிக்கலாக்கும் என்று ரெலோ மற்றும் புளொட் கட்சியினர் கூறியுள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, திருமதி அனந்தி சசிதரனை எங்களது கட்சியின் அங்கத்தவராக இப்போது கருத வேண்டாம் என்று கூறினார். எங்கள் கட்சிக்குரிய அமைச்சர் யார் என்பதை நாம் பிரேரிப்போம் என்று கூறியுள்ளார்.
இதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்த ஐவரின் (மாகாணசபையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அணி என்று அடையாளப்படுத்தப்படுவர்கள்) பெயரைத் தந்தால் அவர்களை நியமிக்கவே மாட்டேன் என்று நேரடியாகச் சொன்னார்.
விசாரணைக்குழு விடுவித்த இரு அமைச்சர்களும் நான் நியமிக்கும் விசாரணைக்குழு முன்பாகத் தோன்றமாட்டோம் என்று கூறியுள்ளனர். அப்படி அவர்கள் தோன்றாவிட்டால் எனக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை நீக்குவேன் என்று கூட்டத்தில் ஒரு கட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி இழைத்த தவறுகளே இந்தப் பிரச்சினை எல்லாவற்றுக்கும் காரணம் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தினார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …