ஓரே ஆண்டில் 6 ஆயிரம் வழக்குகளை தீர்வு செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்ட நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி வரும் தேஜ் பிரதாப் சிங், கடந்த ஆண்டில் 327 வேலை நாட்களில் 6,065 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இடையில், அம்மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்திய போதிலும் அசராமல் தனது கடமையை ஆற்றியுள்ளார் தேஜ் பிரதாப் சிங்.
நாட்டில் மிக அதிகமான வழக்குகளுக்கு தீர்வு வழங்கிய நீதிபதி பிரதாப் சிங்-ன் இந்த சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்து உள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரதாப் சிங் ,”நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க வேண்டும் மற்றும் வழக்காளிகளுக்கு சரியான தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.
குடும்பச் சண்டையால் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்த தம்பதிகளில், 903 தம்பதிகள் பிரதாப் சிங்-ன் ஆலோசனைகளை கேட்டு மீண்டும் இணைந்து தங்களது வாழ்க்கையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.