Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நல்லாட்சியில் வடக்கு, கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு! – மேலும் 3 ஆயிரம் ஏக்கரை விடுவிக்க நடவடிக்கை என்கிறது அரசு

நல்லாட்சியில் வடக்கு, கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு! – மேலும் 3 ஆயிரம் ஏக்கரை விடுவிக்க நடவடிக்கை என்கிறது அரசு

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 5ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது எனவும், மேலும் 3ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து காணி அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக பதில் அளித்தார். பின்னர், காணிப்பிரச்சினை குறித்து மேலும் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறினார்.

திருகோணமலை மாவட்ட காணிப் பிரச்சினை தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக, “திருகோணமலை மாவட்டத்தில் புலியங்குளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள செல்வநாயபுறம், ஆனந்தபுரி, தேவநகர், நித்தியபுரி, லிங்க நகர் ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. 2017 பெப்ரவரி 26ஆம் திகதி செல்வநாயக புறத்தில் காணிக்கச்சேரியொன்றை நடத்தியிருந்தோம். அதில் 46 பேர் கலந்துகொண்டதுடன், காணிகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள மாகாண காணி ஆணையாளருக்கு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தபுரி கிராமத்தில் 55 ஏக்கர் காணியும், நித்தியபுரி கிராமத்தில் 35 ஏக்கர் காணியும் அபகரிக்கப்படவுள்ளது. அதற்கான கட்டளைகளை முறையே காணி அபகரிப்புச் சட்டத்தின் 4ஆம், 2ஆம் உரிப்புரைகளுக்கு அமைய பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

அதுதவிர, தேவநகர், நல்லூர் ஆகியவற்றுக்கு எதிர்காலத்தில் காணிக் கச்சேரிகளை நடத்தி அப்பிரதேச மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

அதுதவிர, நாளை (இன்று) நான் காணி அமைச்சராகக் கடமை ஏற்கவுள்ளேன். பின்னர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது ஆலோசனைக்கு அமைய எமது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்த இலட்சக்கணக்கானவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய செயற்திட்டத்தை விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்” – என்றார்.

பின்னர் கருத்துத் தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “அமைச்சர் சுவாமிநாதனிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும், 3 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த நாளும் இது தொடர்பில் கேள்வி எழுப்புவது எமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், மக்கள் மத்தியில் நாங்கள் காணி விடுவிப்பதில்லை என்ற தப்பபிப்ராயம் ஏற்படும்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …