15 நாட்களாகத் தொடர்கிறது கேப்பாப்பிலவு அறவழிப் போராட்டம்!
இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை 15ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த 7 வருடங்களாக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தொடர் அறவழிப் போராட்டங்களின் பயனாக பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பில் மக்களின் காணிகள் சில விடுவிக்கப்பட்டன.
தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்தி வந்த கேப்பாப்பிலவு மக்கள் கடந்த முதலாம் திகதி முதல் தொடர் அறவழிப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இராணுவ முகாமுக்கு முன்பாகத் தகரக் கொட்டகைகள் அமைத்து இரவு, பகலாக போராட்டம் நடத்துகின்றனர். தமது காணிகளை விடுவிக்கும்வரை போராட்டத்தை முடித்துக் கொள்வதில்லை என்று அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.




