விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைஅச்சர் அருண்ஜெட்லியிடம் விஷால், பிரகாஷ் ராஜ் கோரிக்கை வைத்தனர்.
வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் பென்ஷன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தென்னிந்திய நதிகள் இணைப்புக் குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 84 விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தினமும் விதவிதமாக போராடுகிறார்கள். உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா உள்பட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கு எடுத்து செல்கின்றனர். எனினும் மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது.
இந்த நிலையில் இன்று விவசாயிகள் 12 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்., இன்று 3 விவசாயிகள் அங்கிருந்த மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி செலுத்த அவகாசம் கேட்டும் வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி மிரட்டுவ மரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.விவசாயத்திற்கு ரூ.40,000 செலவு செய்தும் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என கூறினர்.விவசாயிகளின் பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் அகதிகளாக பார்க்கின்றனர்.
மேலும் ஒருவர் இறந்தது போல் படுத்து கிடத்தார். அவருக்கு இறுதி சடங்கு நிகழ்த்துவது போல் போராட்டம் நடத்தினர்
இன்று காலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நேரில் சந்தித்து பேசிய பிரகாஷ் ராஜ், விஷால் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர், விவசாயிகள் பிரச்சினை தீரவும், கடன் தள்ளுபடி குறித்தும் பேசினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து வருவதாக தெரிவித்தார்.
சந்தித்த பின் பேட்டி அளித்த நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது:-
இது தமிழக விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, தேசத்தின் பிரச்சினை. விவசாயிகள் தனி மனிதர்கள் அல்ல. அனைவரும் இருக்கிறோம் என ஆதரவு தெரிவிக்கவே வந்திருக்கிறோம் என்றார். நிதியமைச்சரை சந்தித்து விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசியுள்ளதாகவும் கூறினார்.
நடிகர் விஷால் கூறியதவது:-
விவசாயிகள் கடனால் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.பத்து பேரின் கடனை தீர்க்க முடியும் என்றால் நாங்களே கடனை தீர்த்திருப்போம். ஆனால் பல கோடிக்கணக்கான கடன் தொகை உள்ளது. எனவே அரசு தலையிட்டு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்கப் போவதில்லை. சென்னை திரும்பிய உடன் விவசாயிகளின் கடன் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசி முடிவெடுக்கப் போகிறோம். பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தங்களுக்காக மட்டுமே போராடவில்லை. தலைமுறையை காக்க, விவசாயத்தைக் காக்க போராடி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.