வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பழிவாங்கும் வகையில் செயற்படுகின்றார் என்பதனால் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படும்போது அதில் எந்தப் பதவியையும் பெறுவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றது தமிழரசுக் கட்சி.
அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று யாழ். நகரில் கூடி இந்த முடிவை எடுத்தனர். சுமார் ஒன்றரை மணி நேர விவாதத்துக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டது.
தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான ப.சத்தியலிங்கம் பதவியிலிருந்து விலகுவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களை நியமிப்பதற்கான முதலமைச்சரின் முழு உரிமையையும் அங்கீகரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இணங்கிக் கொண்டதாக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களில் ஒருவர், இந்தப் பிரச்சினை இப்போதைக்கு ஓயாது என்று ஆருடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று புதிய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இடையேயான சந்திப்பில் நேற்றுமுன்தினம் எடுக்கப்பட்ட முடிவுகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அதிருப்தி அடைந்திருந்தது.
இதையடுத்து அந்தக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில், யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ஒன்றுகூடினர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் மாவை சோ.சேனாதிராஜா உரையாற்றினார். முதலமைச்சருடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பது தொடர்பில் தெரிவித்தார்.
“முதலமைச்சருடனான சந்திப்புத் திருப்தியாக அமையவில்லை. வடக்கு மாகாண அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடாப்பிடியாக நிற்கின்றார். கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக் மேலாகவே, கூட்டத்தில் முதலமைச்சரின் செயற்பாடு அமைந்திருந்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டுவது போலவே அவரது பேச்சுக்கள் இருந்தன. அமைச்சரவை மாற்றத்தின்போது தமிழரசுக் கட்சியை முற்றாக ஓரம் கட்டுவதை எதிர்வுகூறுவதைப் போன்றே முதலமைச்சர் கதைத்தார்.
அமைச்சரவையை மாற்றியமைக்க முதலமைச்சருக்கு இருக்கும் உரித்துக்களை தமிழரசுக் கட்சி மதிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் அமைச்சரவை நியமனத்தின்போது பங்காளிக் கட்சிகளின் யோசனைகளைக் கேட்க வேண்டும்.
முதலமைச்சர் இப்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளினதும் யோசனைகளை ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யோசனையை மாத்திரம் அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதை அவரது பேச்சில் நேரடியாக அறியமுடிந்தது.
ஏனைய மூன்று பங்காளிக் கட்சிகளும், தமது கட்சிக்கான அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகத்தான் முதலமைச்சருடன் சேர்ந்து – அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அவ்வாறான தேவை இல்லை. பதவிகளைக் குறிவைத்து நிலைப்பாடுகளை எடுப்பவர்கள் அல்ல நாங்கள். அமைச்சர் பதவி விடயத்தை சர்ச்சைக்குரியதாக நாங்கள் மாற்ற விரும்பவில்லை.
அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை – அந்தப் பலம் மிக முக்கியம். அற்ப சொற்ப பதவிக்காக அதனைத் தவறவிட முடியாது. அமைச்சுப் பதவி தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் பொருட்டே இல்லை.
வடக்கு மாகாண அமைச்சரவை மீள மாற்றியமைக்கப்படும் சந்தர்ப்பத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் அமைச்சுப் பதவியை ஏற்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சரின் குதர்க்கமான செயற்பாட்டினால், அமைச்சரவை விடயத்தை சர்ச்சைக்குள்ளாக்கி தீர்வு விடயத்தை தவறவிட விரும்பாமையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூட்டத்தில் கலந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.