பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் ரூ.9 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அவற்றை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளும்படி அறிவித்து, இதற்காக பல்வேறு நிபந்தனைகள் மற்றும் காலக்கெடு விதிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிந்தபின்னர் ரிசர்வ் வங்கியில் மார்ச் 31-ம்தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும், அதன்பின்னர் அந்த நோட்டுக்களை கையில் வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
ரிசர்வ் வங்கியில் மாற்றுவதற்கான அவகாசம் முடிந்ததையடுத்து, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயற்சிக்கும் நபர்களை போலீசார் கைது செய்யத் தொடங்கி உள்ளனர்.
அவ்வகையில், பெங்களூரின் பென்சன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பழைய ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சமீபத்தில் அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.9.10 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், கர்நாடக சட்ட மேலவை முன்னாள் தலைவர் வீரண்ணா மட்டிகட்டியின் மருமகனும் ஒருவர்.
பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்றதாக 14 பேர் கைது செய்யப்பட்ட தகவலை துணை கமிஷனர் ராஜா இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட பணம் உண்மையில் யாருடையது? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதேபோல் பெங்களூரில் மார்ச் 23-ம் தேதி 1.28 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் கைற்றப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டனர். மார்ச் 28-ம் தேதி 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.4.98 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.