இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் தமிழக மீனவர்களையும் தடுத்து வைக்கப்படும் படகுகளையும் விடுவிக்குமாறு தமிழ் நாட்டில் எவ்வித போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அரசாங்கம் தனது கொள்கையிலிருந்து மாறுபடாதென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாண்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால், கடல் வளம் பாதிக்கப்படுவதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இவ்வாறான நடவடிக்கைக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமான பேசசுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.