“”சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக கைநீட்டுவது தவறான செயற்பாடு என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது”.
– இவ்வாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ரோஹன தி சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவை பிணைமுறி விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தியமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கைநீட்டுவதும், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிப்புரியும் அதிகாரிகளை இழிவுப்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவிப்பதும் தவறான செயற்பாடாகும்.
பிணைமுறி விவகாரத்தை வைத்து தனிப்பட்டவர்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துகளை மக்கள் மயப்படுத்தி மக்கள் மத்தியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உள்ள நற்பெயரை இழிவுப்படுத்த பார்க்கின்றனர். மோசடி விவகாரம் வெளியாகி நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்படும் என்ற அச்சத்தில் எவ்வாறு செயற்படுகின்றனர்.
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மோசடி தொடர்பிலான 50 பயில்களை ஒழித்து வைத்துள்ளார் என்று கூறியுள்ளமையிலேயே இந்த விடயம் நிரூபணமாகியுள்ளது. ஆணைக்குழுவிலே அல்லது நீதிமன்றத்திலேயே முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்ட பின்னர் அதன் பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உரியது.
முறைப்பாடுகளுக்குரிய சாட்சியங்களும் நீதிமன்றில் அல்லது ஆணைக்குழுவில்தான் அளிக்க வேண்டும். அதன் பின்னர் விசாரணைகள் நடைபெற்று நடவடிக்கையெடுக்கப்படும். குறித்த விசாரணை செயற்பாட்டில் ஏதும் தவறுகள் இடம்பெறும் பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டியதும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உரித்துடையது என்றார்.