மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் அப்பாவி உயிர்கள் பலியானமைக்கான பொறுப்பை ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
வெகு விரைவில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகளை அமைத்துக்கொடுப்பதாக உறுதியளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இனியும் மீதொட்டமுல்ல பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல பகுதியில் காணப்படும் இராட்சத குப்பைமேடு குடியிருப்புக்கள் மீது சரிந்ததில் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
வீடுகள், தளபாடங்கள், வாகனங்கள் என மக்களின் இலட்சக்கணக்கான சொத்துக்கள் இடிபாடுகளில் சேதமடைந்து காணப்படுகின்றன.
மீட்பு பணிகள் 6ஆவது நாளாக இன்றைய தினமும் இடம்பெற்று வரும் நிலையில் வியட்நாமிலிருந்து நாடு திரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு இன்று காலை விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின்போது சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் பங்கேற்றிருந்தார்.
அனர்த்தம் ஏற்பட்ட பகுதிக்கு விஜயம் செய்த பிரதமர், இராணுவ அதிகாரிகளிடம் மீட்பு நிலவரம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
இதனையடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கொலன்னாவ டெரன்ஸ் மகா வித்தியாலயத்திற்கு சென்ற பிரதமர், அவர்களுடன் கலந்துரையாடி ஆறுதல் கூறியுள்ளார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிரதமர் “பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைக் காக்கவும், புதைந்துள்ள சடலங்களை மீட்கும் பணிகளையும் முதலாவதாக நாம் ஆரம்பித்தோம். இப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்தக் குப்பைமேட்டினால் ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கையை இராணுவம், பொலிஸாரை பயன்படுத்தி மேற்கொண்டு வருகின்றோம்.வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்க தீர்மானித்திருப்பதோடு நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இடங்களைத் தெரிவுசெய்துள்ளோம். மே, ஜுன் மாதங்களில் அந்த வீடுகளுக்கு இவர்களை அழைத்துச் செல்லும் வரை மாற்று நடவடிக்கையை மேற்கொள்வோம். இழக்கப்பட்ட பொருட்கள், சொத்துக்கள் தொடர்பில் கணக்கெடுப்புக்கள் இடம்பெறுகின்றன. வெள்ளிக்கிழமை இந்த கணக்கெடுப்பு எமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். உலக வங்கி மற்றும் ஜப்பான் நாட்டிலிருந்தும் குழுக்கள் இங்கு வரவுள்ளன. இந்த குப்பைகளை இனியும் இங்கே வைக்கமாட்டோம். இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகளை எடுத்தோம். சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு தாமதமாகியது. அதனால் உயிர்கள் பலியாகின. இதற்கான பொறுப்பை நாங்களும் ஏற்கத்தான் வேண்டும். சமுதாயமும் இதனை ஏற்க வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு பாதிக்கப்பட்ட மக்கள் இயல்புவாழ்க்கையை நடத்த ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்” – என்றார்.