திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் காவல்துறையினரின் விசாரணைக்குப் பயந்து 15 வயது சிறுவன் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சின்னா என்பவர் சென்னை அருகே திருவேற்காடு, கருமாரி அம்மன் கோவில் வளாகத்தில் குடியிருந்து வருகிறார். இவரது மகன் டேவிட்டைத் திருவேற்காகடு காவல்துறையினர் திருட்டு வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
15 வயதுச் சிறுவனான டேவிட்டை 2நாட்கள் விசாரணையின்போதும் காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மூன்றாவது நாளும் விசாரணைக்கு அழைத்ததால், அடித்து உதைப்பார்கள் எனப் பயந்த சிறுவன் டேவிட், திருவேற்காடு வெங்கடேஷ்வரா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
தகவல் அறிந்து அங்குச் சென்ற பெற்றோர் தங்கள் மகனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர். திருவேற்காடு காவல்துறையினர் சிறுவன் டேவிட்டின் உடலைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஏற்கெனவே போலீசார் தாக்கியதால் பயந்து போன சிறுவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தாய் ஜெயசீலி தெரிவித்தார். தன் தம்பி இருசக்கர வாகனத்தைத் திருடியதாகக் காவல்துறையினர் பொய்யாகக் குற்றஞ்சாட்டுவதாகச் சிறுவன் டேவிட்டின் அக்கா ஜெசி தெரிவித்தார்.
எங்குக் குற்றம் நடந்தாலும் ஏழை எளிய கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு காவல்துறையினர் மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினரால் 2 நாட்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.