Saturday , August 23 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / உலகின் மிக அதிகமான எடை கொண்ட எகிப்து பெண் எமான் அகமது அபுதாபியில் மரணம்

உலகின் மிக அதிகமான எடை கொண்ட எகிப்து பெண் எமான் அகமது அபுதாபியில் மரணம்

அபுதாபி மருத்துவமனையில் தன்னுடைய 37-வது பிறந்த நாளை கொண்டாடி ஒருவாரங்களுக்கு பின்னர் எமான் அகமது உயிரிழந்தார்.

எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ பகுதியை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது36). இவர் தனது 11 வயதில் பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கையானார். மேலும் யானைக்கால் நோய் மற்றும் உடலில் சுரப்பிகள் சுரக்காததால் மிகவும் குண்டானார். சுமார் 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் எமான் அகமதுவின் எடை 504 கிலோவானது. எனவே அவர் உலகிலேயே மிகவும் குண்டான பெண்ணாக கருதப்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து மும்பை சர்னி ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது.

இதற்காக ரூ.2 கோடி செலவில் தனி அறை அமைக்கப்பட்டது. மேலும் விமானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 11–ந்தேதி மும்பைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். பின்னர் 3 மாதம் உடல் எடை குறைப்பிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரின் எடை 242 கிலோவாக குறைந்திருப்பதாக சிகிச்சை அளித்து வரும் டாக்டர் முப்பாஷால் தெரிவித்து இருந்தார். ஆனால் எமானின் சகோதரி சாய்மா சலீம் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் முப்பா‌ஷல் மீது குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை டாக்டர் முப்பா‌ஷல் முழுவதுமாக மறுத்தார்.

இந்த பிரச்சனையை அடுத்து சாய்மா கோரிக்கையை ஏற்று எமிரெட்ஸில் உள்ள புருஜீல் மருத்துவமனை டாக்டர்கள் வந்து எமான் அகமதுவை பரிசோதனை செய்தார்கள், அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறினர். இதனையடுத்து எமான் அகமது எமிரெட்ஸ் அனுப்பப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள புருஜீல் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 23/9/16 தேதியின்படி எமான் அகமதுவின் உடல் எடை 500 கிலோ, இப்போது அவருடைய எடை 176.6 கிலோ என மருத்துவமனை டாக்டர் பாஸ்கர் கடந்த மே மாதம் தொடக்கத்தில் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு உடல் எடையை குறைக்க சிகிச்சைக்கு வந்த குண்டுப்பெண் எமிரெட்ஸ் அனுப்பப்படுகிறார்

மே 4-ம் தேதி எமான் அகமது மும்பையில் இருந்து எமிரெட்ஸ் சென்றார். எமிரெட்ஸில் உள்ள புருஜீல் மருத்துவமனையில் எமான் அகமதுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், அவரே உணவை சாப்பிட முயற்சி செய்வதாகவும், அவரால் பொருட்களை எடுக்கவும், கைகளை அசைக்கவும் முடிகிறது எனவும் அவருடைய உடலில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மருத்துவமனையால் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த எமான் அகமது மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்னதாக தன்னுடைய 37-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருடைய உறவினர்கள், டாக்டர்கள் அவருக்கு உணவு ஊட்டிவிட்டு மகிழ்ந்தனர். தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த எமான் அகமது இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எமான் அகமது உயிரிழந்த செய்தியை மருத்துவமனை தரப்பிலும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதயத்தில் பிரச்சனை மற்றும் சிறுநீரகம் செயல்படாமை காரணமாக அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எமான் அகமது எங்களுடைய மருத்துவமனைக்கு வந்ததும் பல்வேறு சிறப்பு பிரிவு டாக்டர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட மருத்துவ குழு சிகிச்சை அளித்து வந்தது, அவருடைய குடும்பத்தினருக்கு எங்களுடைய இதயப்பூர்வமான இரங்கலை தெரிவிக்கிறோம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv