Monday , November 18 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / பஸ் கட்டண உயர்வு ஏன்?

பஸ் கட்டண உயர்வு ஏன்?

தமிழகத்தில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

அரசு போக்குவரத்து கழகங்களில் 22 ஆயிரத்து 509 பஸ்கள் மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 615 பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. மக்கள் நலனை கருதி மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், மலைப்பகுதிகள் போன்ற தொலைதூர இடங்களுக்கும் நாளொன்றுக்கு ஏறத்தாழ 88.64 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 2.02 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர்.

வருவாய் ஈட்ட முடியவில்லை

டீசல் மற்றும் மசகு எண்ணெயின் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதாலும், புதிய பஸ்களின் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, பராமரிப்பு செலவுகள், பணியாளர் ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு, சட்டரீதியான பணப்பயன்கள் மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இக்கூடுதல் செலவுகளினால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பஸ்களை இயக்குவதற்குத் தேவையான வருவாய் ஈட்ட முடியவில்லை.

தொடர்ச்சியான வருவாய் இழப்பால் தொழிலாளர்களுக்காக செலுத்த வேண்டிய பணப்பயன்களை உரிய நேரத்தில் செலுத்த இயலாமல் தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், பஸ்களை சிறப்பாக பராமரித்து இயக்குவதிலும் இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இதுபோக்குவரத்து தொழிலாளர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தையும், மனரீதியான சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

தவிர்க்க முடியாத சூழ்நிலை

தற்போது, போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் விலை உயர்வுக்காக அரசு மானியம் வழங்கி வரும் நிலையிலும் கூட, வருவாய்க்கும், இயக்க செலவிற்கும் உள்ள இடைவெளி இழப்பு நாளொன்றுக்கு ரூ.9 கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது இயங்கும் அரசுப் பஸ்களில் 75 சதவீத பஸ்கள் 6 வருடங்களுக்கு மேற்பட்டவையாக இருப்பதால் அந்த பஸ்களின் இயக்கத்திறனும் படிப்படியாகக் குறைந்து வருகின்றன.

பணியாளர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு, ஓய்வூதியங்கள், எரிபொருட்களின் விலை உயர்வு, இயக்கத்திறனை அதிகரிக்கும் வகையில் புதிய பஸ்களை வாங்குதல், பஸ்கள் பராமரிப்புக்கான செலவு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டும், கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 18.11.2011 அன்று ரூ.43.10-க்கு விற்ற ஒரு லிட்டர் டீசல், இன்று ரூ.65.83 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பஸ் கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களை விட குறைவு

கடந்த 6 வருடங்களாக பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. ஆனால், அண்டை மாநிலங்கள் பஸ் கட்டணத்தை எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக பல முறை உயர்த்தியுள்ளன. கடந்த 2000-ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை கர்நாடகா 16 முறையும், ஆந்திரா மற்றும் கேரளா தலா 8 முறையும் பஸ் கட்டணத்தை மாற்றியமைத்துள்ளன. தமிழகத்தில் உள்ள அடிப்படை பஸ் கட்டணம், பிற அண்டை மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது.

கடந்த 7 வருடங்களில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ரூ.12,059.17 கோடியை மானியமாக அரசு வழங்கியுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள தொடர் நஷ்டம் ரூ.20,488 கோடியாக உள்ளது. அரசு, பஸ் கட்டண உயர்வை இதுவரை தவிர்த்தபோதும், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக இயங்கிடவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை தொடர்ந்து வழங்கிடவும், தற்போது பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் பிற அண்டை மாநிலங்களின் பஸ் கட்டணத்தைவிட பெரும்பாலும் குறைவாகவே உள்ளது.

இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv