Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விகாராதிபதியின் உடலை தகனம்செய்ய அதிகாரம் கொடுத்தது யார் ?

விகாராதிபதியின் உடலை தகனம்செய்ய அதிகாரம் கொடுத்தது யார் ?

“யாழ்ப்பாணம் – முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் ஒரு நடவடிக்கை, இவ்வாறன செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்குகிறது.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

சமகால நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

தமிழ் மக்களின் பண்பாட்டில் இறந்த வர்களுக்கான இறுதி கிரியைகள் தகனம் செய்யும் முறைகள் தனி சிறப்பானவை. மக்கள் கூடுமிடங்கள் ஆலயங்கள் போன்றவற்றில் தகனங்கள் இறுதி கிரியைகள் செய்வதில்லை. நிலை இவ்வாறிருக்க யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரியகுளம் நாகவிகாரையின் பீடாதிபதியின் உடலை தகனம் செய்ய இராணுவம் முயற்சிக்கின்றது .

இது தமிழ் மக்களின் பண்பாட்டை மலினப்படுத்துவதாகவே அமையும். மேலும் இவ்வாறான நடவடிக்கைகளினால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாகாது. மாறாக விரிசல் நிலையே அதிகரிக்கும். இராணுவம் பௌத்தமே மேலானது, வடமாகாணம் தங்களுடைய மண் என்னும் சிந்தனையில் செயற்படுகிறது. அதனை இலங்கை அரசாங்கமும் அங்கீகரித்து தேவையான ஒத்துழைப்புக்களையும் தொடர்ச்சியாக இராணுவத்துக்கு கொடுக்கிறது.

இந்த தகன கிரியை தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது தமக்கு ஒன்றும் தெரியாது என கூறுகிறார்கள். யாழ்.மாநகரசபையிடம் கேட்டால் அவர்களும் தெரியாது என்கிறார்கள். காணி தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானது என்றாலும் வடக்கில் ஒரு அரசாங்கம் உள்ளது.

எனவே இந்த தகன கிரியைகள் தொடர்பாக மாகாண முதலமைச்சர் உ ள்ளிட்ட மாகாண அரசாங்கத்துடன் பேசப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு ஒன்றும் பேசப்படாமல் இராணுவம் தான்தோன்றி தனமாக செயற்படுகின்றது. மக்கள் கூடும் யாழ்.நகரில் முனியப்பர் கோவிலுக்கு அருகில் இந்த தகனம் நடக்கிறது.

அதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? இது மட்டுமல்ல தகன கிரியை நிறைவடைந்ததும் அங்கே விகாராதிபதிக்காக ஒரு விகாரையை அல்லது நினைவிடத்தையும் கூட இந்த இராணுவம் அமைக்கவே போகின்றது. எனவே எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பவேண்டும்.” என்றார்.

விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய நீதிமன்று அனுமதி!!

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv