இலங்கையில் சமாதானமான சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள், ஆணையாளர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறையான நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஆரம்ப காரணமாக செயற்பட்டவர்களை கைது செய்து முழுமையான தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தான் பொலிஸ் உட்பட அதற்கான பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் ஆரம்பிக்கப்படும் போது இலங்கையில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
சில குழுக்கள் திட்டமிட்ட வகையில் இவ்வாறு செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3 வருடங்களாக நாட்டினுள் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முடிந்தளவு செயற்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களிலும் அதற்கான முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.