விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அ.தி.மு.க., சசிகலா அணியானது, முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு பட்டுள்ளது. கட்சியினரிடம் தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்க, சுற்றுப்பயணம் செல்லப் போவதாக, தினகரன் அறிவித்துள்ளார். மேலும், தன்னிச்சையாக புதிய நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார்.
இந்நிலையில், விழுப்புரத்தில் நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க, முதல்வர் பழனிசாமி, காரில் சென்றார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கட்சி முழுமையாக தன் கட்டுப்பாட்டில் இருப்பதை, தினகரன் அணி யினருக்கு உணர்த்த, அவர் தீர்மானித்தார்.
அதற்கேற்றபடி, சென்னையில் இருந்து விழுப்புரம் வரை, வழிநெடுகிலும், கட்சி நிர்வாகிகள் ஆட்களை திரட்டி வந்து, அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
பல இடங்களில், கோவில்கள் சார்பில், முதல்வருக்கு பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.தினகரன் ஆதரவாளர்களாக இருந்த, காஞ்சிபுரம் மாவட்ட செயலர்களும், முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தினகரன் அணியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.