சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை இந்நாடு பரிசோதித்துள்ளது.
அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது.
இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது.
இதனால் கடும் எரிச்சல் அடைந்த வடகொரியா ராணுவம், தற்போது அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வடகொரியா கடுமையான ஊழிக்காலப் பேரழிவை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கையுடன் சமீபத்தில் மிரட்டல் விடுத்தார்.
அமெரிக்க ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இந்த உலகம் இதுவரை காணாத தீயையும் சீற்றத்தையும் வடகொரியா சந்திக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். அவரது மிரட்டலுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங் நகரில் உள்ள கிம் ஈ சுங் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.
வெண்ணிற சட்டைகளை அணிந்திருந்த அவர்கள் அனைவரும் வடகொரியா அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், டொனால்டு டிரம்ப்பை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் பேரணியை அந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் முக்கிய செய்தியாக வெளியிட்டு மகிழ்ந்தன.
இன்னும் ஒருசில நாட்களில் குவாம் தீவின் அருகில் உள்ள இலக்குகளை குறிவைத்து நான்கைந்து ராக்கெட்டுகள் ஏவப்படும் என வடகொரியா நாட்டின் ராக்கெட் தொழில்நுட்ப தலைமை இயக்குனர் கூறிய கருத்துகளும் தொடர்ந்து ஒளிபரப்பானது.
இந்நிலையில், வட கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான இலக்கை முழு ஆயுத பலத்துடன் குறிவைத்து விட்டதாகவும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.