அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கின் இன்றைய வாதத்தின் போது தகுதி நீக்கம் செய்ய 18 எம்எல்ஏக்கள் தரப்பை நோக்கி நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஆளுநரிடம் எதற்காக புகார் அளித்தார்கள் என்று கேட்டார் நீதிபதி. அதற்கு முதல்வர் மீதான எங்களின் அதிருப்தியை ஆளுநரிடம் தெரிவித்தோம் என பதிலளித்தார் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமன்.
அடுத்து, முதல்வர் மீதான அதிருப்தியை தெரிவிப்பதற்கு ஆளுநர் எந்த வகையில் பொருத்தமானவர்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ, நாங்கள் எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவற்காக ஆளுநரை சந்தித்துக் கொடுத்தோம் என 18 எம்எல்ஏக்கள் தரப்பு கூறியது.
ஆனாலும் விடாத நீதிபதி, ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது அதிருப்தி என்றால் என்ன நோக்கம்? என மீண்டும் கேட்டார். அப்போது பதில் அளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர் ராமன், முதல்வரை மாற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டுத்தான் கொடுத்தோம். எங்கள் கட்சியிலேயே மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக செங்கோட்டையனை முதல்வராக ஆக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் ஆளுநரிடம் எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம் என்றார் அதிரடியாக.
சமீபத்தில் செங்கோட்டையனின் பதவிகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருவதும், அவருக்கு ஆதரவாக தினகரன் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.