பொம்மை வெளிப் பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபையால் ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கப்படவுள்ளது. அந்தக் கிணறு அமைக்கப்பட்டால் பொம்மை வெளியில் உள்ள மக்களின் குடி தண்ணீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என யாழ்ப்பாண மா நகர சபை ஆணையாளர் ரி. ஜெயசீலன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், பொம்மை வெளிப்பகுதியில் குடியி ருக்கும் மக்கள் அந்தப் பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபையால் அமைக்கப்பட்ட நீர்க் குழாயில் இருந்து வரும் தண்ணீரையே தமது தேவைகளுக்காகப் பயன்படுத்திவந்தனர்.
கடந்த பல வருடங்களாக இதுவே நடைமுறையில் இருந்து வந்தது. எனினும் கடந்த ஒரு வாரகாலமாக அந்தக் குழாய்களூடான நீர் வரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பொம்மை வெளி முதன்மை வீதியில் தண்ணீர் பரல்களுடன் மணிக்கணக்கில் அவர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் அவர்களுக்கு பவுசர் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்துக்கு 20 லீற்றர்களைக் கொண்ட 4பரல்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலை தொடர்பில் யாழ்பபாணம் மாநகர சபை ஆணையாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதி மக்களுக்கான குழாய் மூலமான குடிநீர் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நாம் அவர்களுக்கு குடிதண்ணீரை வழங்கப் பயன்படுத்திய குழாய்க்கிணறு தற்போது பாவனைக்கு உகந்ததாக இல்லை. தற்போது குடி தண்ணீர் பவுசர் ஊடாக வழங்கி வருகின்றோம். அவர்களுக்கு தடையின்றிக் குடிதண்ணீரை வழங்குவதற்காக புதிதாக ஆழ்துளைக் கிணறு ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள் ளோம்.
கிணறு அமைக்கத் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளோம். முதற் கட்டமாக கிணறு அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்யும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது– -என்றார்.