Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க இயலாது: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க இயலாது: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் தற்போது 39.42 அடி தண்ணீர் மட்டுமே இருப்பதால் வரும் 12ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். தமிழகத்தில் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக அரசு செய்யும் பல்வேறு உதவிகளை விளக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளுக்காக தினமும் 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார். மின் இணைப்பு கிடைக்காத விவசாயிகளுக்கு டீசல் மானியம் வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் வேளாண் எந்திரங்கள் வழங்கப்படும் என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் முதன் முறையாக வேளாண் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறினார். இதற்காக  24 கோடியே 50 லட்ச ரூபாயை அரசு  ஒதுக்கீடு செய்துள்ளதாகக் முதல்வர் அறிவித்தார்.

விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகளை வழங்குவதற்கு தமிழக அரசு 2 கோடியே 77 லட்சத்து 50,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார். இயந்திர நடவிற்கு 100 சதவீதம் மானியத்திற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv