கடுமையான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவத்தின் உயர் அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கஜபா காலாட்படை பிரிவின் தலைமை கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கஜபா படைப்பிரிவின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா இவ்வாரம் ஓய்வுபெறவுள்ள நிலையில், அப் பதவிக்கு சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதி யுத்தத்தின் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இயங்கிய இராணுவத்தின் 58ஆவது படையணியே ஆயிரக்கணக்கான பொதுமக்களின் படுகொலைக்கு காரணமாக அமைந்திருந்ததென பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த மஹிந்த அரசு அவரை ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமித்திருந்தது.
தற்போதைய அரசும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு பதவிகளை வழங்குவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இராணுவ தலைமையகத்தின் பொது உதவி அதிகாரியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு அமைப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வந்திருந்த நிலையில், தற்போது புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.