“புதிய அரசமைப்பின் ஊடாக சமஷ்டி கொடுக்கப்படுவதற்கு முன் எட்கா ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் தாமதிக்காமல் உடனே மைத்திரி அரசைக் கவிழ்க்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த நாடான இலங்கையைக் காப்பாற்ற முடியாது.”
– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“எமது நாட்டிலுள்ள தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சிறுபான்மை இன மக்கள் மற்றும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிக்கு வாக்களித்தோர் என எல்லோரும் இன்று குழப்பத்திலும் கவலையிலும் உள்ளனர். இந்த நாடு புதிய வழியில் பயணிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். எமது ஆட்சியில் பல விடயங்களைச் செய்தோம். போரை முடிவுக்குக் கொண்டுவந்தோம். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பலமான அடித்தளத்தை இட்டோம். சர்வதேச கடன் சுமை குறைந்தது. ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டி சர்வதேசத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தோம்.
சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதும்கூட அவற்றையும் தாண்டி நாம் இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்தினோம். அதைவிடவும் விரிவான பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தியாகமிக்க முன்னுதாரணமிக்க உணர்வுமிக்க தலைமைத்துவத்தின் தேவையை மக்கள் உணர்ந்துள்ளனர்.
ஆனால், மக்களின் விருப்பத்துக்கு மாறாக இந்த அரசு பயணிக்கின்றது. புதிய அரசமைப்பின் ஊடாக சமஷ்டி கொடுக்கப்படுவதற்கு முன் எட்கா ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் இந்த அரசு கவிழ்க்கப்படவேண்டும். இல்லாவிட்டால் போனதைத் திரும்பப் பெறமுடியாமல் போய்விடும். அரசின் மோசமான பயணத்தை நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது.
விடுதலைப்புலிகளுக்குத் தேவையாக இருப்பது மீண்டும் தலைதூக்குவதற்குச் சாதகமான ஒரு யுகம். அதற்குத் தேவை மைத்திரி ஆட்சி என்று அப்போது நாம் கூறியபோது மக்கள் நம்பவில்லை. சர்வதேச சதி என்று கூறியபோது அதைக் கேலியுடன் பார்த்தனர். நாம் அப்போது கூறியவை எல்லாம் இப்போது உண்மையாகிக்கொண்டு போகின்றன.
புலிகள் மெல்ல மெல்ல தலைதூக்கத் தொடங்கியுள்ளனர். மைத்திரிக்கு வாக்களித்த மக்கள் இதை உணரப்போகின்றனர். தாமதிக்காமல் உடனே இந்த மைத்திரி அரசைக் கவிழ்க்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டைக் காப்பாற்றமுடியாது” – என்று தெரிவித்துள்ளார்.