தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று பிற்பகல் சிறைச்சாலை வைத்தியாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களப் பேச்சாளர் உப்புல்தெனிய தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த 7 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.
கடந்த 22 ஆம் திகதி முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் விமல் வீரவன்ச, இன்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பிணை வழங்க வேண்டும் என கோரி விமல் வீரவன்ச இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் கூறியிருந்தனர்.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக விமல் வீரவன்ச இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.