சஜித் தொடர்பில் விஜயகலாவின் அதிரடி பேச்சு
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தன்னுடைய வாக்குகளை இருபது வீதத்திலிருந்து தான் எண்ணப் போகிறார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று வவுனியாவில் தற்போது இடம்பெற்று வருகிறது.
அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
யார் எந்த முடிவெடுத்தாலும் தமிழ் பேசுகின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு முதல் மலையகம் தொடக்கம் கொழும்பு வாழ் மக்கள் வரை மூவின மக்களுமே சஜித்தை தேர்ந்தெடுக்கும் சரியான முடிவை எடுத்துள்ளதாகவும் விஜயகலா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்களுடைய வாக்குகள் சஜித் பிரேமதாசவிற்கு அளிக்கப்பட்டிருக்கிற நிலையில், அவர் இந்த தேர்தலில் தன்னுடைய வாக்குகளை இருபது வீதத்திலிருந்து தான் எண்ணப் போகிறார் என்பது எங்களுடைய மகிழ்ச்சியான செய்தி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் கடந்த கால அரசாங்கம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து எந்த வித அபிவிருத்தியையோ அல்லது இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினையோ எதனையுமே செய்து காட்டவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி எந்தவொரு பெரும்பான்மை இன தலைவரும் வெல்ல முடியாது என்பது வரலாறு எனவும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.