தலைமைச் செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஐஜி, கமிஷனருடன் ஆளுநர் வித்யாசாகர்ராவ் திடீர் ஆலோசனை
தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி தாமரைக்கண்ணன் உள்ளிடோருடன் ஆளுநர் வித்யாசகர் ராவ் திடீரென ஆலோசனை நடத்தினார்.
தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் தமிழக ஆளுநர் இன்று திடீரென ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது தமிழக சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஆளும் அதிமுக கட்சி முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் இரண்டாக உடைந்துள்ளது.
தற்போதைய முதல்வர் ஓபிஎஸ், அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா இருவரும் நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். இந்த நிலையில் இன்று தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் உளவுப் பிரிவு கூடுதல் தலைவர் தாமரைக் கண்ணன், சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோரை ஒரு சேர அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமைகள் குறித்து அனைவரிடமும் ஆளுநரிடம் கேட்டறிந்தார். ஒரே சமயத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசின் உயர்அதிகாரிகளை ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்தியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. விரைவில் உள்துறை அமைச்சருக்கு ஒரு விரிவான அறிக்கையை ஆளுநர் அனுப்பவுள்ளார். இதனால் சட்டம் ஒழுங்கு குறித்தும், அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் அவர் விளக்கம்கேட்டதாக கூறப்படுகிறது.