தமிழக சட்ட சபையை கூட்டி யாருக்கு மெஜாரிட்டி என்பதை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கி.வீரமணி பேட்டி
தமிழக சட்ட சபையை கூட்டி யாருக்கு மெஜாரிட்டியை என்பதை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் கி.வீரமணி பேட்டி அளித்துள்ளார்.
திராவிடர் கழகம் சார்பில் கோவை குனிய முத்தூரில் இன்று மாலை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று கோவைக்கு வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் நிலை மகிழ்ச்சிக்குரியதாக இல்லை.
முதல்வரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்று கொண்டு விட்டார். இதனால் மெஜாரிட்டியை யாருக்கு என்பதை நிரூபிக்கும் வகையில் சட்ட சபையை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை செய்யாமல் கவர்னர் கால தாமதம் செய்யக் கூடாது.
முதல்வர் பன்னீர் செல்வம் தன்னை கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார். இதுபற்றி கவர்னர் தனியாக விசாரணை நடத்த வேண்டும்.
பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பினர் தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
கவர்னர் தனது முடிவை தாமதப்படுத்தி கொண்டே சென்றால் குழப்பங்கள் தான் அதிகரிக்கும். கவர்னர் மவுனமாக இருப்பது ஜனநாயக விரோதம் ஆகும்.
சசிகலாவுக்கு சொத்து குவிப்பு தீர்ப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் கவர்னர் முடிவை தள்ளிப்போடுவது சரியல்ல.
மத்திய அரசு தற்போதைய பிரச்சினையை கண்டுகொள்ளாமல் தமிழகத்தை காவிமயமாக்க முயற்சி செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.