வி.கே. சசிகலாவின் ஆதரவாளராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் பதிவு
வி.கே. சசிகலாவின் ஆதரவாளராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் அணி மாறுவது குறித்த தனது விளக்கத்தை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதில் நிலையான ஆட்சி அமைய முறையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பலதரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் விகே சசிகலாவை அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக அதிமுக எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். இந்த ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்த சசிகலா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை தொடர்ந்து சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மறுபக்கம் முதல்வர் பன்னீர்செல்வம் ஆளுநர் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு முன்னாள் அமைச்சர்களும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்து வரும் நிலையில் நேற்று வரை சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வந்த மாஃபா பாண்டியராஜன் ‘வாக்காளர்களின் குரலுக்கு செவி சாய்ப்பேன்’ என தனது ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.
கட்சியின் ஒற்றுமைக்காகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதோடு முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்திக்க பாண்டியராஜன் முடிவு செய்தார்.
இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா தரப்பில் இருந்து முதல் முறையாக அமைச்சர் ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறுவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அ.தி.மு.க.வின் மக்களவை எம்.பி.க்களான பி.ஆர். சுந்தரம் (நாமக்கல்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி) ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.