எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ஜென்னத் ஜஸ்டர் கூறிஉள்ளார்
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஜென்னத் ஜஸ்டர், பாகிஸ்தானுக்கு பயங்கரவாத விவகாரத்தில் மறைமுகமான தகவலை தெரிவித்து உள்ளார். அமெரிக்கா பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையை அடுத்து பயங்கரவாத இயக்கங்கள் நிதிஉதவி பெறுவதற்கு தடை விதித்து பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அறிவிப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பது பாகிஸ்தானுக்கு மட்டுமே வெளிச்சம்.
இந்நிலையில் இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதர் ஜென்னத் ஜஸ்டர் பேசுகையில், அமெரிக்கா எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. எந்தஒரு நாட்டிலும் பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பு புகலிடம் கொடுப்பதையும் அமெரிக்கா அனுமதிக்காது என்றார். அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதி உதவி மற்றும் பாதுகாப்பு உதவியை நிறுத்தியது தொடர்பாக பேசிய ஜென்னத் ஜஸ்டர், பயங்கரவாதத்தை ஒழிக்க அவர்கள் எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார்.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கிய நிதிஉதவியை நிறுத்தியது தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்ட போது, இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட பயங்கரவாத இயக்கங்களில் பெயரை அறிவிக்க தவறியது ஏன்? என்ற கேள்விக்கு பதில் உரைத்து பேசிய கென்னத் ஜஸ்டர், ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலைக்கு பாகிஸ்தான் மிகவும் முக்கியமாகும். பாகிஸ்தானிடம் இருந்து நேர்மறையான நடவடிக்கை இல்லை எனில் ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை என்பதை நினைத்து பார்க்கமுடியாது. பாகிஸ்தான் பயங்கரவாத பாதுகாப்பு புகலிடங்கள் மீது நடவடிக்கையை எடுக்கவில்லை, ஆப்கானிஸ்தான் அமைதியின்மையில் பாகிஸ்தானின் பங்கும் உள்ளது என்றார்.