பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஹக்கானி வலைச்சமூகத்தினர் என்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அவர்களை முழுமையாக ஒடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். இது தொடர்பாக பாகிஸ்தானை அமெரிக்கா தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு கொள்கையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டபோதும், இதை சுட்டிக்காட்டியது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையோரம், அப்பர் குர்ரம் பகுதியில் அமைந்துள்ள ஹக்கானி வலைச்சமூகத்தின் மூத்த தளபதி அப்துர் ரஷீத் ஹக்கானியின் வளாகத்தில் ஆளில்லா விமானம் மூலம் 2 ஏவுகணைகள் வீசப்பட்டன. முதலில் குண்டுவெடிப்பு என்றுதான் அது கருதப்பட்டது.
ஆனால் பின்னர் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதல் அது; ஹக்கானி வலைச்சமூகத்தினரை குறிவைத்து அந்த தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிய வந்துள்ளளதாக உள்ளூர் அரசு அதிகாரி ஒருவரும், உளவுத்துறை அதிகாரிகள் இருவரும் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் 4 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் அப்துர் ரஷீத் ஹக்கானியும் ஒருவரா என்பது உறுதி செய்யப்படவில்லை.