தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தால் நடைபெறவுள்ளது என அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.
இந்தக் ஹர்த்தாலுக்கு பல பொது அமைப்புகளும், சிவில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், வடக்கு மாகாண புதிய அதிபர் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழு, யாழ்ப்பாணம் பொருளியலாளர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய சோசலிசக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக மாக்கிச லெலினிச கட்சி, தமிழர் விடுதலைக்கு கூட்டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு, தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, அநுராதபுரம் சிறையில் 16 நாட்களாகத் தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், முழுத் தமிழ் அரசியல் கைதிகளையும் ஓர் அரசியல் தீரமானத்தினூடாக விடுவிக்குமாறு அரசை வலியுறுத்தியும், அசமந்தப் போக்கைக் கைவிட்டும் – மழுப்பல் பதில்களை வழங்காமலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கான நேரடி அழுத்தத்தை அரசின் மீது பிரயோகிக்குமாறு எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளை வலியுறுத்தியும், எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை, யாழ்ப்பாணம் வருகை தரவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனக்கு, தாமதமற்ற தீர்வு காண வேண்டிய இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்குமாக எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பை மேற்கொள்ளுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாம் உரிமையோடு அழைக்கின்றோம்.
அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமனதோடு நிறுத்தி – நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளுக்கு எமது ஆத்ம பலத்தைக் கொடுப்போம்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை இந்த நாட்டின் அரசுக்கும், எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கும், இதன் பொறுப்புடைய ஒவ்வொரு தரப்புக்கும் உறுதியாகத் தெரிவிக்க எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 09.30 மணிக்கு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஒன்றெனத் திரள்வோம்” – என்றுள்ளது.