Thursday , November 21 2024
Home / சிறப்பு கட்டுரைகள் / மலையகம் சிந்தனையில் மாற்றம் காண வேண்டும்

மலையகம் சிந்தனையில் மாற்றம் காண வேண்டும்

மலையக தமிழ்ச் சமூகம் மேம்பட்டு வருவதை பாராட்டும் அதேவேளை, மேற்படி விவகாரத்தில் புதைந்து காணப்படுகின்ற உண்மைகளையும், இனிவரும் காலங்களிலும் மலையக தமிழ்ச் சமூகம் மேம்பட்டு வருகின்றபோது சில அரசியல் சக்திகளும் ஏனைய தரப்புகள் சிலவும்,

மலையக மக்கள் என்றும் தொழில் அடிமைகளாகத்தான் வாழவேண்டும் என்ற சிந்தனையில் இருக்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதும் அவ்வாறான எண்ணம் கொண்டவர்களில் பெருமளவிலானோர் தமிழர்கள்தான் என்பதும் கசப்பான உண்மையாகும்.

200 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் குடியேறிய மலையக தமிழ் மக்கள் இன்றளவில் இந்த நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொண்டிருக்கும் சக்திகளாக மலையக தமிழ்ச் சமூகம் இருந்து வருகின்றது. ஆனால், மலையக மக்களின் வாழ்க்கைச் சூழலைப் பார்க்கின்றபோது இந்நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் மக்களா? இவர்கள் என்றுதான் எண்ணத்தோன்றும்.

கடந்த ஆட்சியின் போது இளவரசர் சார்ள்ஸ் இலங்கை வந்திருந்த தினத்தை எவரும் மறந்திருக்க முடியாது. காரணம், அன்று மலையகத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தை நினைத்தால் மனம் பதறுகிறது.

தேயிலைத் தோட்டங்களில் உழைக்கும் தாய்களுக்கு பட்டுச்சேவை அணிவித்து தங்கநகைகளை அணிவித்து தேயிலைத்தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தி இளவரசர் சார்ள்ஸுக்கு மலையக மக்களின் வாழ்க்கைச் சூழல் தொடர்பில் போலி படம் காண்பித்திருந்தார்கள். இதற்கு யார் பொறுப்பு. எம் மக்கள் ஏமாற்றப்பட்டார்களா? இல்லை சிந்தை கெட்டு ஏமாறினார்களா?
மலையக மக்கள்

அதே வேலை நல்லாட்சி அரசாங்கம் மலையகத்தின் பக்கமாக தனது அவதானத்தை சிறிதளவேனும் திருப்பியுள்ளமையானது வரவேற்கத்தக்க ஒன்றாகும். குறிப்பாக, வீடமைப்புத் திட்டங்கள், உள்ளூராட்சி சபைகளை வகுத்து கிராம வாழ்க்கை கட்டமைப்புக்குள் மலையக பகுதி மக்களை உள்வாங்குதல் உள்ளிட்ட விடயங்கள் மிக பயனுடையதாக அமைந்துள்ளது. ஆனால் நம் மலையக தலைமைகள் சிலர் இந்நிலைமையை சாதமாகக் கொண்டு பல அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனாலும் மலையக மக்களை இவர்கள் ஏமாற்றவும் தயங்கவில்லை என்பதும் உண்மையே. இது நல்லாட்சி மீதான புகழ்பாடுதல் அல்ல. சிந்திக்க வேண்டிய உண்மை.

கடந்த காலங்களில் மலையகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்திய அரசியல் கட்சிகள் நினைத்திருந்தால் மலையக மக்களின் வறுமையான வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டிருக்க முடியும்.

ஆனால், அவற்றுக்கான எந்த முனைப்புகளையும் அப்போது ஆட்சிபீடத்திலிருந்த கட்சிகளுடன் கூட்டாக இருந்தவர்கள் முன்னெடுக்கவில்லை என்பதே உண்மையாகும். கட்சி வாழ வேண்டும் என்று முனைபான முயற்சிகளை முன்னெடுக்கின்ற தலைமைகள், தமிழ் சமூகம் வாழ வேண்டும் என்று ஏன் சிந்திப்பதில்லை.

இவ்வாறான நிலையில் அண்மையில் மலையகத்தின் பொகவந்தலாவை பகுதிக்குச் சென்றிருந்த பிரபல அரசியல்வாதியொருவர் அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது வயதான பெண்ணொருவரை தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது, அதனையடுத்து அன்றைய தினத்திலேயே நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திபொன்றின்போதும் கூட்டமாக இருந்த மக்களைத் திட்டித்தீர்த்துள்ளார். இவ்வாறான அரசியல் கலாசாரம்தான் மலையகத்திற்கு வேண்டாம் என்று கூறுகின்றோம்.

மலையகத்தைப் பொறுத்தவரையில் சில அரசியல்வாதிகளை மக்கள் கடவுளாக கருதுகின்றனர். ஆனால், அவர்களோ மக்களை அடிமைகளாவே கருதுகின்றார்கள். அதனால் தங்களை அரசியலில் நிலையான இடத்தில் அமர்த்திய மக்களுக்குக் கடமையாற்ற கடமைப்பட்டுள்ளோம் என்பதை அனைத்து அரசியல்வாதிகளுமே உணர்ந்துகொண்டு செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

எனவே, மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியே ஆகவேண்டிய தீரக்கமான கட்டத்தில் இன்று நாம் இருக்கின்றோம். காரணம், வறுமையில் வாழும் மக்கள் என்பதாலும் தற்காலத்திலும் கூட வாழ்க்கைச்சூழல் சிறிதளவேனும் மேம்படாத நிலையில் மலையக தோட்டப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிகை பெருகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இன்றும் சிலர் முனைப்பான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

மேலும் மலையக பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு இன்னமும் கூட சிறந்த மலசலகூட கட்டமைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. நாகரிகம் அடையாத மக்கள் வசிக்கும் பகுதிகளை ஒத்ததாகவே இப்பகுதி மக்களின் வாழ்க்கைச் சூழலும் அமைந்துள்ளது. இது குறித்து அரசாங்க தரப்புகள் கவனமெடுத்துள்ளதா என்கின்றபோது அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
??????????????????????????????????????????

மலையக மக்கள்
மலையக மக்கள்

ஆகவே, இந்த நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு மலையக அரசியல் தலைமைகள் மக்களை சிறந்த முறையில் வழிநடத்தவேண்டும். கல்வி, கலாசாரம் மற்றும் சமூக பொருளாதார கட்டமைப்புகளை உயரிய நிலையில் கொண்ட ஒரு சமூகமாக மாற்றுவதற்கு ஆட்சி அதிகாரத்தை பயன் படுத்தி செய்யவேண்டிய கடமையை உணர்ந்து செயற்பட வேண்டும்.

அதனைவிடுத்து அன்றுபோலவே இன்றும் மலையகம் வாழ் தமிழ்ச் சமூகத்தை அடிமைகளாகவே வைத்துகொண்டு சுயநல அரசியல் லாபம் ஈட்டும் செயற்பாடுகளையும், மலையக தமிழ்ச் சமூகத்தின் நிலைமையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு குறுகிய அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக்கொள்வதற்கான அரசியல் பிரவேசங்களையும் தவிர்க்கவேண்டும்.

இனிவரும் காலங்களிலாவது மலையகத்திற்கு மாற்றத்தை ஈட்டித்தர முனையும் புதிய இளம் தலைமைகளை உருவாக்கவேண்டும். அப்போதுதான் மேற்குறிப்பிட்டது போன்ற சில நபர்கள் அநாகரிகமான முறையில் மலையக சமூகத்தை விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ள முடியும். விமர்சிக்கப்பதற்கு அவர்களும் தகுதியற்றவர்களாக மாற்றப்படுவார்.

எனவே, மலையக தமிழ்ச் சமூகம் மேற்குறிப்பிட்டது போன்று மாற்றம் காண வேண்டும் , எமது வளர்ச்சிக்கு வழி செய்யவில்லை என அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டுவதை மாத்திரம் சிந்திக்காமல் எமது செயற்பாடுகளில் செய்துகொள்ளவேண்டிய திருத்தங்கள் பற்றியும் சிந்திக்கவேண்டும்.

நன்றி.
ராஜ்_மலையகம்

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv