திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
மாறாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கும், திருகோணமலை எண்ணெய்க் கிணறுகள் விற்பனை விவகாரத்திற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, குறுக்குவழி அரசியல் இலாபத்தை அடைய முயற்சிப்போரே பல்வேறு வதந்திகளைப் பரப்பிவருவதாகவும் கூறினார்.
“பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். பிரதமர் நேற்று மாலை அவர்களை அழைத்து, அமைச்சரையும் அழைத்து கலந்துரையாடினார்.
இந்த விடயத்தில் பிழையான விடயங்களே சமூகத்தில் விதைக்கப்பட்டன.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை விற்பனை செய்வதற்காகவே பிரதமர் இந்தியாவுக்கு செல்வதாக அவர்கள் கூறினார்கள்.
அதை விற்பனை செய்கிறார்கள், இதை விற்பனை செய்கிறார்கள் என்பதையே இன்று பலர் கூறிவருகின்றனர்.
திருகோணமலையில் 100 எண்ணெய் தாங்கிகள் உள்ளன. 2013ஆம் ஆண்டில் இவற்றில் 16 தாங்கிகள் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன. 10 தாங்கிகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பயன்படுத்துகிறது. எஞ்சிய தாங்கிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே இதுகுறித்து பேச்சு நடத்த பிரதமர் இந்தியாவுக்கு செல்லவில்லை.
பிரதமர் மோடி ஸ்ரீலங்காவுக்கு வரவுள்ளதோடு, எட்கா ஒப்பந்தப் பேச்சும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதுகுறித்து பேச்சு நடத்தவும், அரசியல் விவகார கலந்துரையாடலுக்காகவுமே பிரதமர் அங்கு சென்றுள்ளார்.
எண்ணெய் கிணறுகள் குறித்து தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே எடுக்கப்படும்.
இந்த நிலையில் தனது இந்தியாவுக்கான விஜயத்தில் எண்ணெய் கிணறுகள் ஒப்பந்த விவகாரத்துடன் தொடர்புடையதல்ல என்பதை நேற்றைய கலந்துரையாடலில் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகார விஜயமாக இது அமைகிறது.
அதேபோன்று எதிர்வரும் சர்வதேச வெசாக் நிகழ்வுகளுக்காக இந்தியப் பிரதமர் பிரதான விருந்தினராக ஸ்ரீலங்காவுக்கு வந்து கலந்துகொள்ளவுள்ளார். இதுகுறித்து பேச்சு நடத்தவே பிரதமர் அங்கு சென்றுள்ளார்” – என்றார்.