இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் நேற்று (திங்கட்கிழமை) அமர்வில் இலங்கை குறித்த முதல் விவாதமாக பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி முதல், 17ஆம் திகதிவரை, ஜெனீவாவில் நடைபெற்ற பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் நேற்றைய விவாதத் இடம்பெற்றிருந்தது.
விவாதத்தில் உரையாற்றிய ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, ”கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளின்போது முன்வைக்கப்பட்ட 230 பரிந்துதரைகளில் 117 சிபாரிசுகளை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது. இதேவேளை, 12 வாக்குறுதிகளை தாமாக முன்வந்து வழங்கியுள்ளது.
ஆனால், உறுப்பு நாடுகளினால் முன்வைக்கப்பட்ட எஞ்சிய பரிந்துரைகள் குறித்து நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இதேவேளை, இலங்கை குறித்த திறனாய்வு குறித்த அனைவரதும் ஆக்கபூர்வ பங்களிப்பிற்கும், மதிப்புமிக்க பரிந்துரைகளுக்கும் அனைத்து பிரதிநிதிகளுக்கும் நன்றி பாராட்டுவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.