Friday , August 29 2025
Home / முக்கிய செய்திகள் / இலங்கை மீது ஐ.நா. உன்னிப்பான கவனம்! – சம்பந்தனிடன் எடுத்துரைத்தார் ஜெப்ரி பெல்ட்மன்

இலங்கை மீது ஐ.நா. உன்னிப்பான கவனம்! – சம்பந்தனிடன் எடுத்துரைத்தார் ஜெப்ரி பெல்ட்மன்

“இலங்கை அரசின் செயற்பாடுகளை ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட்ட ஐ.நா. சமூகமானது உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.”

– இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன்.

“புதிய அரசமைப்பின் உள்ளடக்கமும் உருவாக்கும் நடைமுறைகளும் நீண்டகால அரசியல் தீர்வுக்கு மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்திக்கும் செழிப்புக்கும் மிக அத்தியாவசியமானதாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு விஜயம்செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்குமிடையிலான சந்திப்பு கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இதன்போதே ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்காக வதிவிடப் பிரதிநிதி உட்பட ஐ.நா. அதிகாரிகள் கலந்துகொண்டதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நாவின் உதவிச் செயலாளர் நாயகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த பின்பும் மக்களின் காணிகளை அரசானது மீண்டும் அவர்களுக்கு மீளக்கொடுக்காமல் இருப்பதற்கான எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை எனத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர், இக்காணிகள் மக்களிடம் மீளக் கையளிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், இக்காணிகளில் ஆயுதப்படையினர் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுகின்றமையானது தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றமையையும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் காணாமல்போனோர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன், பல்வேறு ஆணைக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமர்ப்பணங்களின் அடைப்படையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளனர் எனத் தெரிவித்த அதேவேளை, இவர்களில் அநேகமானோர் ஆயதக்குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார்.

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மையையே மக்கள் அறிய விரும்புகின்றனர் எனத் தெரிவித்த அவர், அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்ததென்பதை அறியாத நிலையில் மக்கள் பாரிய மனஅழுத்தத்தில் காணப்படுகின்றமையையும், இந்த நிலைமை தொடரமுடியாது என்பதையும் வலியுறுத்தினார்.

இந்த மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக காணாமல்போனோருக்கான அலுவலகம் விரைவில் நிறுவப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர், இந்தச் சட்டமூலமானது நீக்கப்படும் என்ற உத்தரவாதத்தை சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கியிருந்தமையை சுட்டிக் காட்டினார். எனினும், இதனை நீக்குவது தொடர்பில் மிகச் சிறியளவு முன்னேற்றமே காணப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை அரசானது இந்த விடயம் தொடர்பில் மிகத் தெளிவான ஓர் உத்தரவாதத்தை ஐ.நாவுக்கு வழங்கியிருந்தமையை சுட்டிக்காட்டிய அதேவேளை, அரசிலுள்ள அமைச்சர்கள் அந்த உத்தரவாதத்துக்கு எதிரான கருத்துகளைத் தற்போது முன்வைப்பதையும் எடுத்துக்காட்டினார்.

இலங்கை அரசானது இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து பின்வாங்கமுடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், காலதாமதமின்றி இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை சர்வதேச சமூகம் உறுதிசெய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இந்த விடயம் தொடர்பில் அநேக விடயங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு உட்பட அனைத்து அரசுகளும் நடைமுறையிலுள்ள அரசமைப்பை மாற்றவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

“2015இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் இதனை அடைந்துகொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது மக்கள் இந்த விடயம் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால், தற்போது இது தொடர்பில் ஒரு தடுமாற்றமான நிலைமை உருவாகியுள்ளது. விசேடமாக இந்நிலைமை அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடையே காணப்படுகின்றது. இவர்கள் தமது தனிப்பட்ட அரசியல் இருப்பைக் குறித்து சிந்திக்கிறார்களே தவிர, ஒட்டுமொத்த நாட்டின் நலன் குறித்து அக்கறை கொள்ளவில்லை” எனவும் தெரிவித்தார்.

இவர்கள் ஒன்றுசேர்ந்து இந்தக் கருமத்துக்கு தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தினார்.

காலவரையறையின்றி இந்த விடயங்களில் தாம் காத்திருக்க முடியாது எனவும், தாம் அர்ப்பணிப்புடன் இந்த விடயத்தில் செயலாற்றுவதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் தீர்வைக் கோரவில்லை. மாறாக, அனைத்து அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் ஒத்துழைப்போடும் ஒப்புதலோடுமான ஒரு தீர்வையே வலியுறுத்துவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சில்லறைத்தனமான அரசியல் விளையாட்டுகளைச் செய்து எமது மக்களை மீண்டும் பாதிக்கப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கு இவர்களுக்கு இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர், இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும், இதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

“கொடுக்கப்பட்ட காலஅவகாசத்தை சரியாகப் பயன்படுத்தி ஐ.நா. தீர்மானத்தை உச்சபட்சத்தில் நடைமுறைப்படுத்துவதில் தேவையான படிமுறைகளை அரசு மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எம்மிடம் இருந்தமையால் அரசு காலஅவகாசத்தைக் கோரியபோது நாம் அதனை எதிர்க்கவில்லை. ஆனால், கடந்த சில மாதங்களில் இடம்பெற்றுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆய்வு செய்கின்றபோது தமிழ் மக்கள் நிச்சயமாக திருப்தியடையவில்லை” என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவின் கருத்துகளுக்குப் பதிலளித்த அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், இலங்கை நிலைவரம் தொடர்பில் ஐ.நா. அவதானத்துடன் இருக்கின்றது எனத் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசமைப்பின் உள்ளடக்கமும் உருவாக்கும் நடைமுறைகளும் நீண்டகால அரசியல் தீர்வுக்கு மாத்திரமன்றி நாட்டின் அபிவிருத்திக்கும் செழிப்புக்கும் மிக அத்தியாவசியமானதாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசின் நல்லெண்ணங்கள், அடிமட்டத்திலுள்ள மக்கள் மாற்றத்தை உணர்ந்துகொள்ளும் வகையிலான செயன்முறைகளாக மாற்றப்படவேண்டும் எனவும் தெரிவித்த ஐ.நாவின் உதவிச் செயலாளர் நாயகம், ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட்ட ஐ.நா. சமூகமானது இந்த முக்கிய விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பான அவதானத்துடன் செயற்படும் எனவும், இலங்கை தொடர்பில் தமது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர்காலத்திலும் முன்னெடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv