Wednesday , February 5 2025
Home / முக்கிய செய்திகள் / இலங்கையை அச்சுறுத்துகிறார் ஐ.நா. ஆணையாளர்!

இலங்கையை அச்சுறுத்துகிறார் ஐ.நா. ஆணையாளர்!

“இலங்கையின் உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயற்பட்டுவருகின்றார்” என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இதன்போது ஆரம்ப உரையை நிகழ்த்திய மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல்ஹுசைன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அசமந்தமாகச் செயற்பட்டுவருவதாகவும், இந்நிலைமை நீடித்தால் அது சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அவரின் இந்த அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியல் கட்டளையின் 23/2இன் கீழ் வினாக்களைத் தொடுத்து உரையாற்றுகையிலேயே தினேஷ் குணவர்தன எம்.பி. மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனைத்துலக மட்டத்தில் அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் இலங்கை விடுபட்டுவிட்டதாக ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ச்சியாக அறிவித்துவருகின்றனர். ஆனால், அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிவிப்பானது இலங்கையின் உள்விவகாரத்தில் மீண்டும் தலையிடுவதாகவே அமைந்துள்ளது.

இது பாரதூரமான பிரச்சினையாகும். இறையாண்மையுள்ள நாட்டை அச்சுறுத்தவே ஆணையாளர் முற்பட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் வெளிவிவகார அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிப்பு விடுக்கவேண்டும்” – என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv