Monday , November 18 2024
Home / முக்கிய செய்திகள் / ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கை மீது அழுத்தம்! – அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது கூட்டமைப்பு

ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கை மீது அழுத்தம்! – அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது கூட்டமைப்பு

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மைத்திரி – ரணில் தலைமையிலான அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். இதனை இவ்வாரம் இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்ஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தவுள்ளது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் இந்தவாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் மாநாடு கொழும்பில் எதிர்வரும் 31ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளது.

அலரி மாளிகையில் நடக்கவுள்ள இந்த இரண்டு நாள் மாநாட்டில் உலகில் பல்வேறு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டில் அமெரிக்காவின் சார்பில் தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் பங்கேற்கவுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் நடக்கும் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் அலிஸ் வெல்ஸ் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

அவர் அந்த உரைக்கு முன் அன்று காலை கொழும்பில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை காலை உணவுடன் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தச் சந்திப்புக் குறித்து வினவியபோதே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

“புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் எடுத்துரைக்கவுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள்” எனவும் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அலிஸ் வெல்ஸ் தனது இலங்கைப் பயணத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், வணிகத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து அமெரிக்காவின் ஒத்துழைப்பு தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இலங்கை வரவுள்ளார். அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவுள்ளார். இதன்போதும் மேற்படி கோரிக்கை விடுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv