வடக்கு – கிழக்கை இணைத்து, நாட்டை அரசமைப்பு ஊடாகப் பிளவு படுத்த எண்ணிய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் நோக்கங்களை முறியடிக்கவே இரு அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய.
அவரது பணியகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்களின் நெடுநாள் அரசியல் கனவை மைத்திரி நிறைவேற்றி வைத்துள்ளமையானது வரவேற்கத்தக்கது. கூட்டு அரசு என்று இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டாலும் ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கங்கள் நமது நாட்டு பொருத்தமற்றதாகவும் மேற்குலகத்தினருக்கு பொருத்தமானதாகுவும் காணப்பட்டது.
கடந்த 3 ஆண்டு காலமாக அரசு மேற்குலகத்தினரது விருப்பங்களை மாத்திரமே நிறைவேற்றியது.
அரசின் அதிகாரங்களை பொறுத்தவரையில் ஐக்கிய தேசிய கட்சியினரே அதிகம்
செல்வாக்குடையவர்களாக காணப்பட்டனர். பெயரளவில் மாத்திரமே சிறிலங்கா சுதந்திர கட்சியினர் அரசில் அங்கம் வகித்தனர். கொள்கை ரீதியில் இரண்டு தரப்பினருக்கும் பெரிய வேறுப்பாடுகள் காணப்பட்டது. அதன் உச்சக்கட்டமே கடந்த மாதம் 26ஆம் திகதி பெரிய மாற்றமாக வெளிப்பட்டது.
நாடு தொடர்ந்து பொருளாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் பின்னடைவை எதிர்கொண்டு வந்தது. ஐக்கிய தேசிய கட்சியினரது செயற்பாடுகள் இவற்றை வலுப்படுத்துவதாக இருந்தது. பன்னாட்டு ரீதியிலும் நாட்டின் தனித்துவம் மழுங்கடிக்கப்பட்;டது.
இவ்வாறான விடயங்களுக்கு தீர்வு கண்டு நாட்டை ஐக்கியப்படுத்தவே முன்னாள் அரசதலைவரை நாங்கள் தலைமை அமைச்சராகத் தெரிவு செய்தோம். பல தீர்க்கமான கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டைப் பிளவுப்படுத்தும் விடயங்களுக்கு கடந்த காலங்களில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க துணை சென்றார். இதன் காரணமாக பல தேசிய வளங்கள் விற்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்களின் பிரதான நோக்கம் நாட்டுக்குள் மீண்டும் இனவிரோதங்களை ஏற்படுத்துவது.
இவர்களின் நோக்கங்களை முறியடிக்கவே இரு தலைவர்களும் ஒன்றினைந்துளளனர். இனி எமது நாட்டு மக்களுக்காகவே அரசு செயற்படும். பன்னாட்டுச் சமூகத்தின் அழுத்தங்கள் எவ்விதத்திலும் சமூக அரசியல் விடயங்களில் செல்வாக்குச் செலுத்தாது – என்றார்.