Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மூவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மூவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்குகள் இடமாற்றப்பட்டு அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றில் நேற்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரசியல் கைதிகள் மூவரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
 
வவுனியா மேல்நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்று வந்த வழக்கை, அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றுக்கு இடமாற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த 13ஆம் திகதி, வவுனியா மேல் நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
 
இதற்கு அமைவாக வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று எடுக்கப்பட வேண்டிய வழக்கு அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றிலேயே எடுத்துக்கொள்ளப்பட்டது. அரச சட்டத்தரணி மன்றில் முன்னிலையாகவில்லை.
 
மொழிப் பிரச்சினை காரணமாக வழக்கு விசாரணையை இங்கு எடுத்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடில்லை என்று அரசியல் கைதிகள் மன்றில் தெரிவித்துள்ளனர். அதற்கு நீதிபதி, இவர்கள் கேட்டுக் கொண்டாலும், சட்டமா அதிபர் இந்த வழக்கை இங்கே எடுக்கச் சொல்லியுள்ளமையினால் விசாரிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன் சட்டத்தரணி இருக்கா என்று அரசியல் கைதிகளிடம் வினவியுள்ளார். அதற்கு அவர்கள் இல்லை என்று பதில் வழங்கியதும், சட்டத்தரணியைக் கொண்டு வர எத்தனை நாட்களாகும் என்று நீதிபதி கேட்டுள்ளார். அதற்கு அரசியல் கைதிகள் பதில் வழங்கவில்லை. இதன் பின்னர், எதிர்வரும் 2ஆம் திகதி வழக்கு எடுத்துக் கொள்ளப்படும். சட்டத்தரணியைக் கொண்டு வராவிடின், அரச செலவில் சட்டத்தரணியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
 
இதேவேளை, அரசியல் கைதிகள் மூவரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்றுக்  காலையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv