Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எதிர்கால சந்ததிக்கு அச்சுறுத்தல்! மைத்திரிக்கு எச்சரிக்கை

எதிர்கால சந்ததிக்கு அச்சுறுத்தல்! மைத்திரிக்கு எச்சரிக்கை

நாட்டில் அதிகரிக்கும் சூழல் மாசடைவுகள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இதனை கருத்திற்கொண்டு அனைவரும் சூழலை பாதுகாக்க கைகோர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கேகாலை நகரில் நேற்று இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”சூழல் கட்டமைப்பினைப் பாதுகாப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், அது எவ்வகையிலும் தவிர்க்கப்பட முடியாத பொறுப்பாகும்.

சுற்றாடல் தினத்தில் மாத்திரமன்றி வருடம் முழுவதும் செயற்படுத்தப்படும் சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்துடன் இணைந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பினை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டதிட்டங்கள், நாட்டின் எதிர்கால நன்மை கருதியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் அத்தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள், நாடு என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கிய துர்ப்பாக்கியமான நிலைமையாகும்.

நிர்மாணத் துறைக்கு தேவையான கல், மண், மணல் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதனால் சூழல் கட்டமைப்பில் தாக்கம் ஏற்படுகின்றது.

அபிவிருத்தி செயற்திட்டங்கள் நாட்டிற்கு முக்கியமாகும் என்பதனால் அதற்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகளை இனங்காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கடத்தல் மற்றும் ஊழல்மிக்க வர்த்தக செயற்பாடுகளினால் சூழல் கட்டமைப்பு பாதிக்கப்படுவது மாத்திரமன்றி கடந்த சில வருடங்களாக உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

ஆகவே ஒரு தினத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாத தொடர்ச்சியான சூழல் பாதுகாப்பு செயற்திட்டங்கள் அவசியமாகும். அதனை நிறைவேற்ற நாட்டின் சகல பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv