Wednesday , August 27 2025
Home / முக்கிய செய்திகள் / உலகெங்கும் இன்று பேரெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்! – கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லூரில் பிரதான நிகழ்வு

உலகெங்கும் இன்று பேரெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்! – கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லூரில் பிரதான நிகழ்வு

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!” என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம்  லெப். கேர்ணல் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் தாயக மண்ணிலும், புலம்பெயர் தேசத்திலும் இன்று பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளன.

வடக்கு, கிழக்கில் அமைதிப்படையாகக் காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி  சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்தவர் திலீபன்.

ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைத்தீயை விதைத்த திலீபன், உண்ணாவிரதப் போராட்டத்தை 30 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு ஆரம்பித்தார். ஈழத்தமிழரின் தாயக தேசமெங்கும் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து அஹிம்சைத் தீயை யாழ். நல்லூரில் திலீபன் பற்றவைத்தார்.

12 நாட்கள் நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தை  முன்னெடுத்த தியாக தீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

அஹிம்சையைப் போதித்த  காந்திய தேசம் என்று சொல்லப்பட்ட இந்தியா, தியாக தீபம் திலீபனின் அஹிம்சைப் போராட்டத்தின் முன் தோற்றுப்போனது. திலீபனின் சாவை வேடிக்கை பார்த்தது இந்தியா. இதுவே பின்னாளில் விடுதலைப்புலிகள் இந்தியப் படையினரை  ஈழமண்ணிலிருந்து அடித்து  விரட்டி  துரத்தும் அளவுக்கு மாற்றம் கண்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவுநாள்  தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைப் பிரதேசங்களில் மிக உணர்வெழுச்சியுடன் கடந்த காலங்களில் நினைவுகூரப்பட்டது. சிவப்பு, மஞ்சள் கொடிகளால் தமிழர் தாயக மண் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய சந்திகளில் திலீபனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

தாயக தேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர், பகிரங்கமாக பொது வெளியில் நினைவுநாள் நினைவுகூரப்படவில்லை. புலம்பெயர் தேசங்களில் மாத்திரம் பேரெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுவந்தது.

2016ஆம் ஆண்டு யாழ். நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில்  10 வருடங்களின்  பின்னர் பகிரங்கமாக நினைவுநாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன. இவ்வருடமும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வார  நிகழ்வுகள் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த செப்டெம்பர் 15ஆம் திகதியிலிருந்து நல்லூரிலுள்ள நினைவுத்தூபியில் நினைவுகூரப்பட்டு வருகின்றது. அதேவேளை, தமிழர் தாயகத்திலும் திலீபனின் நினைவேந்தல் வார நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

திலீபன் வீரச்சாவடைந்த செப்டெம்பர் 26ஆம் திகதியான இன்றைய தினம் அவரது 30ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் தாயக மண்ணிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளன.

கூட்டமைப்பின் ஏற்பாட்டில்
நல்லூரில் பிரதான நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்.நல்லூரில் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் நல்லூரிலுள்ள  திலீபனின் நினைவுத்தூபியில் இன்று மாலை 6.05 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண அமைச்சர்கள், வடக்கு மாகாண சபை  உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு ஈழத்தமிழரின் விடிவுக்காய் தன்னையே தகுதியாக்கிக்கொண்ட திலீபனுக்கு அஞ்சலி செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv