2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியைத் தவிர்த்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு அந்தக் கட்சியின் அமைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 50 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது என்றும், அந்தப் பணம் மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி மூலம் பெறப்பட்டது என்றும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“பிரதமரின் திருட்டைத் தேடுவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ள அதிசயமொன்று இந்த நாட்டில்தான் நிகழ்ந்துள்ளது. மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தக் குழு பிரதமரின் திருட்டைத் தேடும் குழுவாகும்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாட்டுக்கு நிதி தேவை என்று கூறி மத்திய வங்கி ஊடாகப் பிணை முறி விநியோக மோசடியை மேற்கொண்டார். இந்த மோசடியால் அதிக பணத்தைச் சம்பாதித்த அர்ஜுன் அலோசியஸ், ரவி கருணாநாயக்கவுக்கு மாதம் பத்தாயிரம் டொலர் வாடகையில் வீடொன்றை எடுத்துக் கொடுத்துள்ளார்.
இன்று ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எல்லோரும் சிக்கிவிட்டனர். எல்லோரும் அஞ்சுகின்றனர்.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியைத் தவிர்த்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு அந்தக் கட்சியின் அமைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 50 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது. அந்தப் பணம் மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி மூலம் பெறப்பட்டது என்ற உண்மையை அவர் ஆணைக்குழு முன் கூறவேண்டி வரும்.
அது மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவேண்டிவரும். இன்னும் பல ஊழல், மோசடிகள் வெளிவரும். ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது என்பது சந்தேகமே” – என்று தெரிவித்துள்ளார்.