முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? மருத்துவர்கள் குழு பேட்டி
சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் தான் வந்தார்; தேர்தல் ஆவணங்களில் சுயநினைவுடன் தான் கைரேகை வைத்தார்’ என, அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் டாக்டர்கள் இன்று அளித்த பேட்டி:
சுயநினைவுடன் இருந்தார் :
கடந்த ஆண்டு செப்., 22ம் தேதி இரவு காய்ச்சல், நீர்சத்து குறைபாடு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளுடன் முதல்வர் ஜெயலலிதா மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் சுயநினைவுடன் தான் இருந்தார். அவரது நுரையீரல், இதயம், சிறுநீரகத்தில் நோய் தோற்று பாதிப்பு இருந்தது. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்து இருந்தார். எனினும், செப்சிஸ் போன்ற நோய் தொற்றினால் உடல் உறுப்புகள் செயல் இழக்க தொடங்கின. மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ரத்தத்திலும் தொற்று இருந்தது.
கைரேகை வாங்கியது ஏன்?
அக்., 22ம் தேதி அவரிடம் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படித்து காட்டப்பட்டு தான் கைரேகை வாங்கப்பட்டது. அப்போது டாக்டர்கள் பாலாஜி, பாபு ஆகியோர் உடன் இருந்தோம். அப்போது அவர் சுயநினைவுடன் தான் இருந்தார். கையில் டிரிப் ஏற்றி, கை வீக்கத்துடன் இருந்ததால் தான் கையெழுத்து வாங்க முடியவில்லை. கைரேகை பெறப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவரின் புகைப்படம் வெளியிடப்படுவது வழக்கம் இல்லை.அவ்வப்போது செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு இதயம் செயலிழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தான் உயிரிழப்பு நேரிட்டது. அவரது கால்கள் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
எம்பால்மிங் நடந்தது:
டாக்டர் சுதா சேசையன் கூறியதாவது: ஜெயலலிதா உடல் பதப்படுத்துதல் எனப்படும் எம்பால்மிங் செய்யப்பட்டது தான். டிச., 5ம் தேதி இரவு 12.20 முதல், 20 நிமிடங்களுக்கு உடலை பதப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒருவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் போது, சீதோஷண நிலை காரணமாக உடல் கெட்டு விட கூடாது என்பதற்காக தான் எம்பால்மிங் செய்யப்படும்.மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உடல் கூட எம்பால்மிங் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.