தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்குதல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த 10 நாட்களில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி – பளை வைத்தியர் டொக்டர் சின்னையா சிவரூபன் கடந்த 18ம் திகதி இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
வைத்தியர் சிவரூபன் வழங்கிய தகவலுக்கு அமைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து மூன்று சந்தேக நபர்கள் கடந்த 22ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
கல்முனை மருதமுனை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்தாக தெரிவித்து சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், கிளிநொச்சி பளை பகுதியில் வைத்து இன்று, மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சின்னமணி டனீஸ்வரன், இரத்தினம் கிருஸ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னதுரை, விநாயகமூர்த்தி நிஜிலன், ரி.நிமல்ராஜ், ரூபன் ஜேசுதாசன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வைத்தியர் சின்னையா சிவரூபனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக பெருந்தொகையாக வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலிருந்து கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்” என அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.