கண்டி தெல்தெனிய மற்றும் திகன பிரதேசங்களில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை தடுத்து நிறுத்த பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான இரகசிய அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதுடன், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெல்தெனிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் திகன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மோதலை தடுக்க உத்தியோகபூர்வ மட்டத்தில் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசேட விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தெல்தெனிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் ஒரு காலத்தில் தங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக சேவையாற்றியுள்ளார்.
மேலும், திகன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் ராஜபக்ச ஆதரவாளர் எனவும் அவர் சூரியவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது.
மது போதையில் இருந்த சில முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலில் சுமை ஊர்தி சாரதியான 42 வயதான சிங்களவர் உயிரிழந்தார். கடந்த 3ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
அம்பாறையில் அசம்பாவிதங்கள் நடந்ததன் காரணமாக தெல்தெனிய பிரதேசத்திற்கும் விசேட பாதுகாப்பு வழங்குமாறு அமைச்சர் றிசார்ட் பதியூதீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சிங்கள இளைஞனின் மரணம் தொடர்பாக அறிந்து கொண்ட சில பௌத்த பிக்குகள், சிங்கள அடிப்படைவாத அமைப்புகளிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளனர். இதனையடுத்தே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.