Tuesday , December 3 2024
Home / விளையாட்டு செய்திகள் / ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி நாளை

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி நாளை

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி, அடிலெய்ட்டில், இலங்கை நேரப்படி காலை ஒன்பது மணிக்கு பகல் – இரவுப் போட்டியாக ஆரம்பிக்கின்றது. அந்தவகையில், பழமை வாய்ந்த ஆஷஸ் தொடரின் முதலாவது பகலிரவுப் போட்டியாக இப்போட்டி அமைகின்றது.

முதலாவது போட்டியின் முதல் மூன்று நாட்களிலும் இரண்டு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியபோதும் நான்காவது நாளை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி அவுஸ்திரேலியா, 10 விக்கெட்டுகளான தோல்வியை இங்கிலாந்துக்கு வழங்கி மிகுந்த நம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்குகிறது.

இரண்டாவது போட்டி நடைபெறும் அடிலெய்ட் ஆடுகளமே அவுஸ்திரேலியாவிலேயே வேகமான ஆடுகளம் என்று கூறப்படுவதோடு, பகல் இரவுப் போட்டியில் பயன்படுத்தப்படும் மென்சிவப்பு நிறப் பந்து, இரவு நேரங்களில் அதிகம் ஸ்விங் ஆகும் என்ற நிலையில், மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோரை உள்ளடக்கிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சுக் குழாமின் தாக்கம் இப்போட்டியில் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணியின் மூன்றாமிலக்கத் துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜாவின் சுழற்பந்துவீச்சுக்கெதிரான பலவீனங்கள் அவுஸ்திரேலியாவிலும் தொடர்கிறதா என கேள்விகள் எழுப்பப்பட்டபோதும் தனது இடத்தை அணியில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான இன்னொரு வாய்ப்பாக இப்போட்டி கருதப்படுகிறது.

அந்தவகையில், பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன் ஆகியோர் ஓட்டங்களை முதலாவது போட்டியில் பெற்றிருக்காதபோதும் இப்போட்டியிலும் முதலாவது போட்டியில் களமிறங்கிய அதேயணியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு மைதானத்துக்குள்ளான பெறுபேறுகள் தொடர்பான அழுத்தத்தை விட விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ, அவுஸ்திரேலியாவுக்கு வந்த முதல் நாளில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கமரோன் பன்குரோப்டை தலையால் முட்டிய விடயம் பூதாகரமாக வெடித்து அழுத்தத்தை வழங்கியிருந்தது.

ஆக, குறித்த விடயத்திலிருந்து மீளுவதற்கான ஒரே வழியாக சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்துவது மாத்திரமே ஆகும். அந்தவகையில், தமது முன்னாள் அணித்தலைவரும் சிரேஷ்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அலிஸ்டியர் குக்கிடமிருந்து ஓட்டங்களை இங்கிலாந்து எதிர்பார்ப்பதுடன், ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவர்ட் ப்ரோட் தவிர்ந்த பந்துவீச்சாளர்களிடமிருந்து மேம்பட்ட பெறுபேறுகளை எதிர்பார்க்கிறது.

விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக, முதலாவது போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் குறிப்பிடத்தக்களவுக்கு மொயின் அலி பந்துவீசியிருக்கவில்லை. ஆகவே, மென்சிவப்பு நிறப் பந்துகளில் மணிக்கட்டால் சுழற்சியை வழங்கும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்படுவார்கள் என்று கூறப்படுகையில், நான்காவது வேகப்பந்துவீச்சாளரான ஜேக் போலுக்குப் பதிலாக, புறச்சுழற்பந்துவீச்சாளர் மேஸன் கிரேன், டெஸ்ட் போட்டிகளில் தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என்று கருதப்படுகிறது. மற்றுப்படி அணியில் மாற்றமிருக்காது என்றே கருதப்படுகிறது.

Check Also

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு …