Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தமிழ் மக்களுக்கு ஏமாற்றம்!

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தமிழ் மக்களுக்கு ஏமாற்றம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தனது கொள்கை விளக்க அறிக்கையை இரண்டாவது தடவையாக நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

நடைபெற்று வரும் ஆட்சியின் 8வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அவர் முன்வைத்த கொள்கை விளக்க அறிக்கைக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக இந்த ஆட்சியின் எஞ்சிய இரண்டு வருட காலத்துக்கான கொள்கை விளக்க அறிக்கையை அவர் முன்வைத்தார்.

ஆட்சிக்கு வரும் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் எதனையும் உருப்படியாக நிறைவேற்றியிருக்காத நிலையில் அவரது இந்தக் கொள்கை விளக்க உரைக்கு மிகுந்த முக்கியத்துவமும் எதிர்பார்ப்பும் இருந்தது.

எஞ்சியிருக்கும் காலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு என்ன செய்யப் போகிறார்கள், எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பதற்கான விளக்கவுரையாக இந்தக் கொள்கை விளக்க உரை அமைந்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படியல்லாமல் ஏமாற்றம் தரும் விதத்திலேயே அவரது உரை அமைந்திருக்கிறது.

3 வருடங்களுக்கு முன்னர் தனது கொள்கைவிளக்க உரையில் அவர் முன்வைத்த அதே சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்றே 3 ஆண்டுகளின் பின்னரும் அவர் தனது உரையில் கூறியிருக்கிறார்.

ஆனால், தமது நோக்கத்தை அடை வதற்கான பாதையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் அடைவுகளைத் தமது அரசு கண்டிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.

இருந்தாலும் அதற்கு உதாரணங்களாக அவர் குறிப்பிட்டிருப்பவை எல்லாமே நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகளின் பக்க விளைவுகளோடு தொடர்புபட்டவையாக இருக்கின்றனவே தவிர முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கானதாக இல்லை.

குறிப்பாக நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயம் தொடர்பில்ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை எந்தவிதமான காத்திரமான கருத்தையும் முன்வைக்கவில்லை.

இடைநடுவில் நின்றிருக்கும் புதிய அரசமைப்பு முயற்சிகள் எந்த வகையில் முன்னகரப் போகின்றன என்பதற்கான எந்த சமிக்ஞையும் அதில் இல்லை.

“எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வடக்கு – கிழக்கு மக்களின் பொறுமையிழப்பை நிரந்தரமாகச் சமரசப்படுத்த வேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தல் வேண்டும்” என்று மட்டுமே அவர் கூறியிருக்கிறார்.

அதற்கு மேல் அதனைச் சாத்தியமாக்குவதற்கான வழிவகை குறித்து அவரது உரையில் ஏதும் இல்லை.அதைவிட புதிய அரசமைப்பு முயற்சியில் இருந்து ஜனாதிபதி முற்றிலுமாகப் பின்வாங்கி விட்டாரோ என்று அச்சப்படக்கூடிய வகையில் மாகாண சபைகள் குறித்த அவரது கருத்து அமைந்துள்ளது.

“நிலையான நாட்டின் அடித்தளம் தேசிய நல்லிணக்கமே ஆகும். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும்.

அந்த நோக்கை வெற்றி கொள்வதற்கு தற்போது செயலில் இருந்து வரும் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் அவர்.

தமிழர்களின் பிரச்சினைக்குத் தற்போதைய மாகாண சபை முறைமை ஒரு தீர்வாக மட்டுமல்ல தீர்வுக்கான அடிப்படையாகக்கூட அமையாது என்று தமிழ் மக்கள் முற்றிலுமாக நிராகரித்து விட்ட நிலையில் அந்த மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது காலத்தின் தேவை என்று அவர் கூறியிருப்பது புதிய அரசமைப்பு முயற்சியைக் கைவிட்டு அரசமைப்புத் திருத்தம் மூலம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைத் தமது வசதிக்கேற்ப அதிகரிப்பதையே குறிக்கிறதோ என்று சந்தேகிப்பதற்கு நிறையவே இடம் உண்டு.

அவர் அப்படி நடந்து கொண்டால், இந்த உரையில் அவரே குறிப்பிடும் ‘‘தமிழ் மக்களின் சம உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட வேணவாக்களை ஏற்றுக்கொள்ளல்’’ என்பதன் அடிப்படையிலான தீர்வாக நிச்சயம் இருக்காது.

அந்த வகையில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் தருவதாகவே அமைந்திருக்கிறது. யானைப் பசிக்குச் சோளப் பொரி போன்று இருக்கிறது அவரது உரை.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv