“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சர்கள் விலகினால் தனிக் கட்சியொன்று ஆட்சியமைக்க நேரிடலாம். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத்தான் பெறவேண்டியேற்படும். அப்படி நடந்தால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு பிரச்சினைகளுக்கு எம்மால் இலகுவில் முகங்கொடுக்கமுடியாது. ஆகவே, கூட்டு அரசுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு.”
– இவ்வாறு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்றில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா 82 என்ற அடிப்படையில்தான் ஆசனங்கள் உள்ளன. ஆட்சியமைப்பதற்கு 113 ஆசனங்கள் தேவை. கட்சித் தாவல்களின் ஊடாகத்தான் பூர்த்திசெய்யமுடியும். ஆனால், முக்கியமான பல பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசுக்கு இல்லாமல் போய்விடும். இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்காகவே நாம் இரண்டு பிரதான கட்சிகளையும் இணைத்துக் கூட்டு அரசை உருவாக்கினோம்.
ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சர்கள் விலகினால் தனிக் கட்சியொன்று ஆட்சியமைக்க நேரிடலாம். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத்தான் பெறவேண்டியேற்படும். அப்படி நடந்தால் அது நாட்டில் எதிர்மறையான கருத்துகளைத் தோற்றுவிக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்து ஆட்சியமைப்பதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களுக்கு பிரச்சினைகளுக்கு எம்மால் இலகுவில் முகங்கொடுக்க முடியாது.
அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் விலகுவதன்மூலம் கட்சியை ஒருபோதும் வளர்க்கமுடியாது. கட்சியின் வளர்ச்சியில் அதன் தலைவர் மைத்திரிக்கு மாத்திரம் பங்கில்லை. மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பங்குண்டு. அவர் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர்க்கமுடியாது. அதேபோல், மஹிந்தவாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தவிர்க்கமுடியாது. அவருக்குக் கிராம மட்டத்தில் மக்கள் ஆதரவு உண்டு. இந்தச் செல்வாக்கு கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படவேண்டும்.
சந்திரிகாவின் ஆட்சியில் ரணில் விசாரணைக்காக நீதிமன்றக்கூண்டில் ஏற்றப்பட்டவர். அவரும் சந்திரிகாவும் இப்போது இணைந்து செயற்படமுடியும் என்றால் மைத்திரியும் மஹிந்தவும் ஏன் இணையமுடியாது? அரசியல் நிலையான எதிரியும் இல்லை; நண்பனும் இல்லை” – என்றார்.