தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்குவேன் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது.
கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க முன்வராது. கடந்தகால அனுபவங்களில் இருந்து தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இதை உணர்ந்து விட்டார்கள்.
இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
முன்னாள் அரச தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்திருந்தார்.
இதன்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை கூட்டமைப்பே குழப்பியது என்றும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுடன் பேச்சு நடத்தி தீர்வை வழங்குவேன் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பில் கேட்டபோதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
மீண்டும் ஆட்சியைப் பிடித்து தலைமை அமைச்சர் கதிரையில் அமர்ந்திருக்கவும் தனது சகோதரர்களில் ஒருவரை அரச தலைவராக்கவுமே மகிந்த ராஜபக்ச விரும்புகின்றார். இதற்கு தமிழர் தரப்பின் பேராதரவு அவருக்குத் தேவைப்படுகின்றது.
இதற்காகவே தமிழர் மனதை வெல்லும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வீண்பழியைச் சுமத்தும் வகையிலும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
சுமார் பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தவர் மகிந்த ராஜபக்ச. அவருக்கு தமிழர் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் அப்போதே தீர்வை வழங்கியிருக்கலாம்.
நான் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எனக்கு அமோக வாக்குகளை அளித்தனர்.
ஆனால், அந்த வாக்கு வீதத்தில் இருபது வீத வாக்குகளைக்கூட வடக்கு, கிழக்கில் அன்று மகிந்த பெறவில்லை.
2010ஆம் நடைபெற்ற அரச தலைவர் தேர்தல் 2015ஆம் ஆண்டு தேர்தல் மாதிரி நீதியாக நடந்திருந்தால் நான் அரச தலைவராகியிருப்பேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க என்னை நம்பி வாக்களித்த தமிழ் மக்களிடம் நான் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து உரிய தீர்வை வழங்கியிருப்பேன் – என்றார்.