Friday , August 29 2025
Home / முக்கிய செய்திகள் / லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

லண்டன் தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசுகளும், அரசல்லாதோரும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் வன்செயல்கள் குறித்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 1977ம் மாநாட்டினை மீள நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மானிட விழுமியங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காமல் லண்டனில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததும் காயப்படுத்தியதுமான வெறிச்செயலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கடைசியாக நடந்துள்ள இத்தாக்குதலுக்கு சற்று முன்னர்தான் மான்செஸ்டரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடந்த கொடூரமான குண்டுவெடிப்பில் இருபதுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். பிரித்தானிய மக்களுக்கும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

அண்மைய ஆண்டுகளில் உலகெங்கிலும் பல்வேறு அரசுகளும் அரசல்லாத செயற்பாட்டாளர்களும் நடத்தி வரும் வன்செயல்களிலும் போர்முறையிலும் அப்பாவிக் குடிகள் கொல்லப்படுவது வாடிக்கையாகி விட்டது. இது போர்வீரர் அல்லாதாருக்கும் பொதுமக்களுக்கும் எதிராக எந்நிலையிலும் வன்முறை ஏவுவதைத் தடை செய்யும் ஜெனீவா ஒப்பந்தங்களையும், 1977 வகைமுறை விதிகளையும், பிற பன்னாட்டு உடன்படிக்கைகளையும் அறவே மீறுவதாகும்.

இன்று, அரசினர் ஆயினும் அரசல்லாதார் ஆயினும், கொடுந்தாக்குதல் நடத்துவோர் குழந்தைகளுக்கும் மருத்துவ மனைகளுக்கும் பாடசாலைகளுக்கும் தேவாலயங்களுக்கும் உள்நாட்டுப் புலம்பெயர்ந்தோரின் முகாம்களுக்கும் கூட கருணை காட்டுவதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. இவையெல்லாம் பன்னாட்டுச் சட்டத்தின் படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள்.

பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் 1977 கூடுதல் வகைமுறைகளைத் தோற்றுவித்த மாநாடு போல் மீண்டும் ஒரு மாநாடு கூட்டுவதற்கு இதுதான் சரியான தருணம். அந்த 1977 வகைமுறைகள்தாம் எவ்வகைப் போர்முறையிலும் கடைப்பிடிக்க வேண்டிய சமர்க்கள நெறிகளை விதிக்கும் அனைத்துலக உடன்படிக்கைகளுக்கு அரசினரும் அரசல்லாதாரும் தம் கடப்பாட்டை மீளுறுதி செய்யுமாறு அழைப்பு விடுத்தன. அதேபோது இந்த விதிகளை மீறிச் செயல்படும் எல்லாத் தரப்புகள் மீதும் திறமான விதத்தில் வழக்குத் தொடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

அரசல்லாத செயற்பாட்டாளர்களும் அரச முகமைகளும் நடத்தும் வன்செயல்களுக்கு நடுவே சிக்கித் தவிக்கும் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்காக்க வேண்டும் என்பதோடு, மனிதகுலம் முழுவதற்கும் நீதியான, அமைதியான எதிர்காலம் அமைவதை உறுதி செய்யவும் வேண்டும் என்றால் இந்த முன்னெடுப்புகள் அவசர அவசியமாகும் எனத் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv